×

தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார் கூடுதல் தலைமைச் செயலாளர்

சென்னை: சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்போர் அடுத்த மூன்று மாதத்திற்குள் ஆன்லைன் உரிமம் பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் தெருநாய் கணக்கெடுப்பு ஜூலை 10-ம் தேதி தொடங்குகிறது என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். மூளையை உண்ணும் அமீபா குறித்து தேவையற்ற பதற்றம் இருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம் (WVS), தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன்இன்று (08.07.2024) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது: பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம் (WVS), தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படும் என மேயர் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் மற்றும் மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்கள். அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.

மாநகராட்சியில் 2018ஆம் ஆண்டு 59 ஆயிரம் தெருநாய்கள் இருந்தன. தற்பொழுது பல்வேறு கருத்துக்களின் அடிப்படையில் இராயபுரம் மண்டலத்தில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் இந்த கணக்கெடுப்பு பணியினை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக உலகளாவிய கால்நடை சேவை நிறுவனத்துடன் இணைந்து பணியினை மேற்கொள்ள இன்று பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வற்கான வழிமுறைகள் குறித்தும், தடுப்பூசி போடப்பட்ட நாய்கள், கருத்தடை செய்யப்பட்ட நாய்கள், குட்டிகள், பெரிய நாய்கள், ஆண் அல்லது பெண் நாய்கள் என அனைத்து விவரங்களையும் சேகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னையில் தற்பொழுது குறுகிய நேரத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது.

ஜூன் மாதத்தில் ஒரு மணிநேரம் மற்றும் இரண்டு மணி நேரத்திற்குள் சோழிங்கநல்லூரில் 12.5 செ.மீ. மழைப்பொழிவும், வடசென்னையில் 9 செ.மீ. மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளும் எந்த பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. அனைத்து இடங்களிலும் மழைநீர் உடனே வடிந்து கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு மற்றும் கோவளம் ஆகிய நான்கு வெளியேறும் வழிகளில் செல்கிறது.

தாழ்வான சில பகுதிகளில் மழை பெய்யும் நேரத்தில் நீர்த்தேக்கம் ஏற்படுகிறது. அதுவும் மழை நின்றவுடன் வடிந்து விடுகிறது. பேரிடர் மேலாண்மையின் மூலம் அறிவிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளான 40 இடங்களில் தேங்கும் மழைநீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்படுகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளின் காரணமாகவும் மழைநீர்த்தேக்கம் ஏற்படுகிறது. இதற்காக பணிக்குழு அமைக்கப்பட்டு உடனுக்குடன் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் குறிப்பாக பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் போன்ற பகுதிகளிலும், சேவைத்துறைகளின் சார்பில் பணிகள் நடைபெறும் பகுதிகளிலும், கோயம்பேடு, மணப்பாக்கம் போன்ற பகுதிகளிலும் குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான பணிகள், மழைநீர் வடிகால் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தப் பகுதிகளில் பல்வேறு சவால்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பகுதிகளிலும் குறிப்பிட்ட பணிக்குழுவினை அமைத்து பணியினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் 24 மணிநேரமும் இரவு பகலாக செயல்படும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், மழைநீர் வடிகால்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் வண்டல்கள் அடைப்பு, குழாய்களில் நீர்த்தேக்கம் ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வகையில், பொதுசுகாதாரத்துறையின் சார்பில் நீர் மற்றும் உணவினால் ஏற்படக்கூடிய நோய்கள், கொசுக்களினால் ஏற்படக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு தான் தற்பொழுது உள்ளது.

புளியந்தோப்பு மற்றும் சைதாப்பேட்டை பகுதிகளில் வயிற்றுப்போக்கு தொடர்பாக பிரச்சினை கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டு அதுவும் சரிசெய்யப்பட்டது. இந்தப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிக்கென 362 மருந்து தெளிப்பான்கள், 69 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 202 ஸ்ப்ரேயர்கள், 238 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 2 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 65 புகைப்பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் அதிகமாக உள்ள காரணத்தினால் முன்னெச்சரிக்கையாக, நீர்த்தேக்கம் ஏற்படும் இடங்களில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெருநாய்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு 10,100 நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றில் 7,265 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 1,05,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளைப் பொறுத்தவரை, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின் அடிப்படையில் கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளது. தற்பொழுது அபராதத்தை அதிகரித்த காரணத்தினால் கடந்த ஆண்டை விட 50 விழுக்காடு புகார்கள் குறைந்துள்ளது. இதுநாள்வரை 1,251 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக பிடிபடும் மாடுகளை வெளியேற்ற கால்நடைத் துறையுடன் இணைந்து இடங்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

செல்லப்பிராணிகளைப் பொறுத்தவரை, 3 புதிய செல்லப்பிராணிகளுக்கான மையம் மற்றும் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் உயர்தர நாய்ப்பட்டிகளுடன் (Kennel) அமைக்கப்பட்டு வருகிறது. செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மழைக்காலங்களில் அனைத்து அலுவலர்களும் அதிக கவனத்துடன் செயல்பட்டு, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். புகார்கள் வரும் பட்சத்தில் அவற்றில் முழுக் கவனம் செலுத்தி உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி, உலகளாவிய கால்நடை சேவை நிறுவன இயக்குநர் டாக்டர் கேர்லெட் அன்னே ஃபெர்ணாண்டஸ் (Dr. Karlette Anne Fernandez), மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் கமால் உசேன், தன்னார்வலர்கள், எத்திராஜ் மற்றும் ஜெயின் கல்லூரி மாணவர்கள், நாய் பிடிக்கும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார் கூடுதல் தலைமைச் செயலாளர் appeared first on Dinakaran.

Tags : Additional Chief Secretary ,Chennai ,Chennai Municipal Corporation ,Municipal Commissioner ,Radhakrishnan ,Stray Dogs Survey ,Dinakaran ,
× RELATED திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது...