மராட்டியம்: மராட்டிய மாநிலத்தில் மிக பலத்த மழையால் வரலாற்று புகழ்பெற்ற ராய்கட் கோட்டையை பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. மும்பை, தானே, நவி மும்பை மற்றும் கல்நாய் உள்ளிட்ட மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருகிறது, இது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ரத்தினகிரியில், ஆறுகளின் நீர்மட்டம் அபாயகரமாக உயர்ந்து வருவதால், கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராஜாபூர் தாலுகாவில் உள்ள ஜக்பூதி ஆறு அபாய அளவை தாண்டியதால் அருகில் உள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரலாற்று சிறப்பு மிக்க பிரபலமான சுற்றுலாத் தலமான ராய்காட் கோட்டையில் மழைபெய்ததால் அவற்றின் படிகள் நீர்வீழ்ச்சிகளாக மாறியது. இந்த நிலையில் கோட்டைக்கு வருகை தரும் சிவ பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் 30க்கும் மேற்பட்டோர் மலைப்பாதை வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். தகவலறிந்து சென்ற மராட்டிய பேரிடர் மேலாண் படையினர் 10 பேரை மீட்ட நிலையில் மேலும் 20 சுற்றுலா பயணிகளை மீட்டு வருகின்றனர். மேலும், கனமழையின் போது கோட்டைகள் மற்றும் பிற ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post மராட்டியத்தில் வரலாற்று புகழ்பெற்ற ராய்கட் கோட்டையை சூழ்ந்த பெருவெள்ளம்: 30 சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கினர் appeared first on Dinakaran.