×

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

பேரணாம்பட்டு, ஜூலை 8: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலங்களில் புகுந்து ஒற்றை காட்டு யானை நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு குண்டலபல்லி, ரங்காம்பேட்டை, அரவட்லா, பாஸ்மர்பெண்டா, டிடி மோட்டூர், சாரங்கள், பத்தலபல்லி போன்ற கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுதேடி அவ்வப்போது அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து விடுகிறது. இந்நிலையில் பேரணாம்பட்டு அடுத்த கோட்டையூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் ஒற்றை காட்டு யானை புகுந்தது. அங்கு முனிரத்தினம், வெங்கடேசன், எல்லப்பன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் நிலத்தில் புகுந்து 2 மாங்காய் மரங்கள், 4 வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியது. மேலும் நிலங்களில் இருந்த தீவனம், நெற்பயிர்களை மிதித்து துவம்சம் செய்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வருவதற்குள், விவசாயிகள், பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்கள் அடித்தும் சுமார் 1 மணிநேரம் போராடி வனப்பகுதிக்குள் காட்டு யானையை விரட்டியடித்தனர். தொடர் யானைகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் யானைகள் நிலத்திற்குள் கிராமத்திற்குள் வராதவாறு வனத்துறையினர் யானைக்குழிகள், மின்வேலிகள், தடுப்பு சுவர்கள் போன்றவை அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Tags : Raanampattu ,Vellore District ,Ranampattu Kundalabally ,DT Motor ,Essentials ,
× RELATED கே.வி.குப்பத்தில் பிரசித்தி பெற்ற...