ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 8: ஸ்ரீவில்லிபுத்தூரில் இரவு நேரத்தில் வேப்பமரத்தில் திடீரென பற்றி எரிந்த தீயினால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி தேசிய நெடுஞ்சாலையில் செங்குளம் விலக்கு பகுதி அருகில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் திடீரென வேப்ப மரம் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி முத்து செல்வத்திற்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வேப்பமரத்தில் எரிந்த தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். வேப்ப மரத்திற்கு யாரும் தீ வைத்தார்களா, எப்படி தீப்பிடித்து எரிந்தது என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு திடீரென தீப்பிடித்த வேப்பமரம் appeared first on Dinakaran.