×

சுட்டீஸ் முதல் சுகர் உள்ளவர்கள் வரை அனைவரும் ருசிக்கலாம் விரும்பி வாங்கிச் சாப்பிடும் வகையில் விதம் விதமா தயாராகுது பால்கோவா

ஸ்ரீவில்லிபுத்தூர் : தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் புவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மற்றும் பால் ஸ்வீட்டுகளுக்கு செம டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி பட்டாசுகள் மட்டுமின்றி, சுவை மிகுந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விற்பனையும் படுஜோராக நடப்பது வழக்கம்.

நாளை மறுதினம் (அக். 31) தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் பால்கோவா, பால் ஸ்வீட்கள் விற்பனை ஸ்ரீவில்லிபுத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தாண்டு பால் அல்வா, பால் கேக், பால் பேடா, கேரட் பால்கோவா, கருப்பட்டி பால்கோவா மட்டுமின்றி சர்க்கரை நோயாளிகளுக்காக ஸ்பெஷலாக வெல்லத்தால் தயார் செய்யப்பட்ட பால்கோவாவும் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பு இருந்தே விற்பனை சூடுபிடித்துள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் பால்கோவா, பால் ஸ்வீட்களுக்கு தற்போது செம டிமாண்ட் நிலவுகிறது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தயாரிப்பு பணி இரவு பகலாக நடந்து வருகிறது.

இதுகுறித்து பால்கோவா, பால் ஸ்வீட் தயாரித்து விற்பனை செய்யும் பாம்பே ரவி கூறுகையில், ‘‘இந்த ஆண்டும் தீபாவளிக்கு பால்கோவா, பால் அல்வா மற்றும் பால் ஸ்வீட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு ஆர்டரின் பேரில் வழங்கி வருகிறோம். சர்க்கரை நோயாளிகளுக்காக வெல்லத்தால் தயார் செய்யப்பட்ட பால்கோவாவும் இந்த முறை விற்பனை கொண்டு வந்துள்ளோம். புவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு தனி சுவை இருப்பதால் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் பால்கோவா தயாரிக்கும் விற்பனையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’’ என தெரிவித்தார்.

The post சுட்டீஸ் முதல் சுகர் உள்ளவர்கள் வரை அனைவரும் ருசிக்கலாம் விரும்பி வாங்கிச் சாப்பிடும் வகையில் விதம் விதமா தயாராகுது பால்கோவா appeared first on Dinakaran.

Tags : Srivilliputhur ,Diwali ,Virudhunagar district ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள்...