×
Saravana Stores

கே.ஜி.கண்டிகையில் அமைந்துள்ள வார சந்தை மைதானத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றம்

 

திருத்தணி, ஜூலை 8: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை நொச்சிலி சாலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம், நெல் கொள்முதல் நிலையம், மற்றும் வாரச்சந்தை அமைந்துள்ள பகுதியில் தினமும் விவசாயிகள் வந்து செல்கின்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். கேஜி கண்டிகை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சந்தைக்கு வந்து வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில், கே.ஜி.கண்டிகை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் சேகரிக்கும் குப்பை கழிவுகள் பல ஆண்டுகளாக வாரச்சந்தை, அரசு அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றது. மேலும் கடை வியாபாரிகள், திருமண மண்டபங்களிலிருந்து இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் குப்பை மலைப்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகின்றது. வாரசந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் துர்நாற்றம் வீசுவதால், மூக்கை மூடிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மழைகாலம் தொடங்க உள்ள நிலையில் குப்பை கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த வெள்ளிக்கிழமை படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் உத்தரவின் பேரில், கேஜி கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் சௌமியா ராஜசேகர் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று வார சந்தை மைதானத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். இதனால் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post கே.ஜி.கண்டிகையில் அமைந்துள்ள வார சந்தை மைதானத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : KG Kandigai ,Tiruthani ,KG Kandigai Nochili road ,Tiruvallur district ,Thiruthani ,KG Kandikai ,Dinakaran ,
× RELATED மாவட்டச் செயலாளர் முன்னிலையில் நடந்த...