- 2ஆம் டி20ஐ
- ஜிம்பாப்வே
- இந்தியா
- அபிஷேக்
- ஹராரே
- அபிஷேக் சர்மா
- ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
- டி 20 ஐயில்
- தின மலர்
ஹராரே: ஜிம்பாப்வே அணியுடனான 2வது டி20 போட்டியில், இந்தியா 100 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பதிலடி கொடுத்தது. தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக சதம் விளாசி அசத்தினார். ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் சாய் சுதர்சன் அறிமுகமானார். கில், அபிஷேக் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். கில் 2 ரன் மட்டுமே எடுத்து முஸரபானி பந்துவீச்சில் பென்னட் வசம் பிடிபட, இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.
அடுத்து அபிஷேக் உடன் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்தார். இருவரும் அதிரடியில் இறங்க, இந்திய ஸ்கோர் வேகம் எடுத்தது. டியான் மையர்ஸ் வீசிய 11வது ஓவரில் 3 பவுண்டரி, 2 சிக்சர் விளாசி துவம்சம் செய்த அபிஷேக் 33 பந்தில் அரை சதம் அடித்தார். அதன் பிறகு ஒரேயடியாக டாப் கியருக்கு தாவிய அவர் 47 பந்தில் சதத்தை நிறைவு செய்து சாதனை படைத்தார். அபிஷேக் 100 ரன் (47 பந்து, 7 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி மசகட்சா பந்துவீச்சில் மையர்ஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அபிஷேக் – ருதுராஜ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 137 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ருதுராஜ் – ரிங்கு சிங் ஜோடி அதிரடியைத் தொடர, இந்தியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன் குவித்தது. ருதுராஜ் 77 ரன் (47 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), ரிங்கு 48 ரன்னுடன் (22 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 20 ஓவரில் 235 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 18.4 ஓவரில் 134 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக வெஸ்லி 43 ரன் (39 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), லூக் ஜாங்வே 33, பிரையன் பென்னட் 26 ரன் (9 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாச, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஆவேஷ் கான், முகேஷ் குமார் தலா 3 விக்கெட், ரவி பிஷ்னோய் 2, வாஷிங்டன் 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் போட்டியில் 13 ரன் வித்தியாசத்தில் போராடித் தோற்ற இந்தியா, நேற்று 100 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பதிலடி கொடுத்தது. அபிஷேக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.
The post ஜிம்பாவேயுடன் 2வது டி20: 100 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: அபிஷேக் அதிரடி சதம் appeared first on Dinakaran.