சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்த விவசாயியை சுத்தியலால் அடித்து கொன்று வீசிய வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டபுரம் கிராமத்தை ஒட்டி அடர்ந்த வனப்பகுதியில் கடந்த ஜூன் 26ம் தேதி வனத்துறையினர் ரோந்து சென்றபோது மனித எலும்புக்கூடு கிடந்ததை பார்த்தனர். தகவலின்படி ஆசனூர் போலீசார் எலும்புக்கூட்டினை கைப்பற்றி ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவர்கள் எலும்புக்கூட்டை ஆய்வு செய்ததில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடலின் எலும்புக்கூடு என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது எலும்புக்கூடாக கிடந்தது தொட்டபுரத்தை சேர்ந்த விவசாயி குமார் (40) என்பதும், கடந்த மே 26ம் தேதி முதல் காணாமல் போனதும், அவரை அதே ஊரை சேர்ந்த நாகமல்லு (26), முத்துமணி (43), மாதேவன் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்து வனப்பகுதியில் வீசியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில், குமாருக்கும், முத்துமணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை முத்துமணியின் மகன் நாகமல்லு அறிந்து குமாரை கண்டித்ததாக தெரிகிறது. இருப்பினும் தொடர்ந்து இருவரும் உறவில் இருந்தனர். கடந்த மே 26ம் தேதி முத்துமணியுடன் குமார் தனது வீட்டில் இருப்பதை நாகமல்லு பார்த்தார். இதனால் ஆத்திரம் அடைந்த குமார், உறவினர் மாதேவனை வரவழைத்து, இருவரும் சேர்ந்து சுத்தியலால் குமாரின் தலையில் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் குமார் உயிரிழந்தார். இதையடுத்து நாகமல்லு, முத்துமணி, மாதேவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து குமாரின் உடலை இரவோடு இரவாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று வீசியுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post தாயுடன் கள்ளத்தொடர்பு; விவசாயி கொன்று வீச்சு: வாலிபர் கைது appeared first on Dinakaran.