புதுடெல்லி: வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ரஷ்யாவுக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து நாளை ஆஸ்திரியா செல்கிறார். பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தியா ரஷ்யா இடையிலான 22வது வருடாந்திர உச்சி மாநாடு மாஸ்கோவில் இன்று தொடங்குகிறது. இதற்காக இன்று பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்கும் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள், வர்த்தகங்கள், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.
கடந்த 2022ல் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார். இந்த போர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணப்பட வேண்டுமென்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. எனவே உக்ரைன் போர் விவகாரம் குறித்தும் புடினுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய பயணத்தை தொடர்ந்து நாளை ஆஸ்திரியா நாட்டிற்கு மோடி செல்கிறார். 40 ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரியாவுக்கு இந்திய பிரதமர் செல்ல இருப்பது இதுவே முதல் முறை. இதனால் இப்பயணத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறியிருந்த ஆஸ்திரிய பிரதமர் நெஹம்மருக்கு பிரதமர் மோடி நேற்று தனது டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
The post உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று ரஷ்யாவுக்கு செல்கிறார் மோடி: நாளை ஆஸ்திரியா பயணம் appeared first on Dinakaran.