×

கடலூர் அருகே சென்னை பஸ் தடுப்பு கட்டையில் மோதி டிரைவர் பலி: 49 பேர் படுகாயம்; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கடலூர்: கடலூர் அருகே அரசு பேருந்து தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உயிரிழந்தார். கண்டக்டர் உள்பட 49 பேர் படுகாயமடைந்தனர். சென்னை பேருந்து நிலையத்திலிருந்து வேதாரண்யத்திற்கு தமிழக அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு 11 மணி அளவில் பயணிகளை ஏற்றுக்கொண்டு புறப்பட்டது. பேருந்தை நாகை மாவட்டம், வேதாரண்யம் பச்சையன் தெரு சேர்ந்த ராஜா (44) ஓட்டி வந்தார். நடத்துனராக நாகப்பட்டினத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (41) பணியில் இருந்தார்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் அரசு பேருந்து புதுச்சேரி-கடலூர் சாலையில் ரெட்டிசாவடி அடுத்த கரிக்கன் நகர் மலாட்டாறு பாலம் அருகே வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் அடியில் சிக்கிய டிரைவர் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த லெனின் (45), சென்னை சுந்தரி (53), மணிகண்டன் (41), பசுபதி (41), வசந்த் (23), முருகன் (44), மாறன் (80), ராம் (30) நடத்துனர் கிருஷ்ணமூர்த்தி உள்பட 49 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்து ஈடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி, கடலூர், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் உதவியுடன் பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து காரணமாக புதுச்சேரி-கடலூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post கடலூர் அருகே சென்னை பஸ் தடுப்பு கட்டையில் மோதி டிரைவர் பலி: 49 பேர் படுகாயம்; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Cuddalore ,Tamil Nadu government ,Vedaranyam ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...