×

பிளாஸ்டிக் கழிவுகள் சாப்பிட்டதால் உயிரிழப்பு: தனியார் தோட்டத்தில் சடலமாக கிடந்த காட்டெருமை

கூடலூர், ஜூலை 7: தமிழக கேரள எல்லையில் 925 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், கேரள மாநிலத்தின் இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் பெரியாறு புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுஎருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த சரணாலயப்பகுதியிலிருந்து அவ்வப்போது காட்டு எருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதியை ஒட்டி உள்ள ஸ்பிரிங்வேலி, செளிமடை, முருக்கடி போன்ற குடியிருப்பு பகுதிக்குக்குள் நுழைவதால் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் காட்டு எருமை ஒன்று சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் செளிமடை வெள்ளரம்குன்று ரோட்டில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, காபி தோட்டத்தில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டெருமை இறந்த நிலையில் கிடந்தது. இதுபற்றி பொதுமக்கள் குமுளி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். குமுளி ரேஞ்சர் அனில்குமார் தலைமையில் வனக்காப்பாளர்கள் ரெஜிமோன், விஜயகுமார், ஆதர்ஷ், ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த காட்டு எருமையின் உடலை கைப்பற்றினர். கால்நடை மருத்துவர் டாக்டர் அனுமோத் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்தது. பிறகு காட்டு எருமையின் உடல் வனப்பகுதியில் தகனம் செய்யப்பட்டது. இறந்தது மூன்று வயதுடைய காட்டு எருமை என்றும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை உட்கொண்டதால் அது உயிரிழந்ததாகவும் முதற்கட்ட பிரேத அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பிளாஸ்டிக் கழிவுகள் சாப்பிட்டதால் உயிரிழப்பு: தனியார் தோட்டத்தில் சடலமாக கிடந்த காட்டெருமை appeared first on Dinakaran.

Tags : Bison ,Cuddalore ,Periyar Tiger Reserve ,Idukki ,Pathanamthitta ,Kerala State ,Tamil Nadu ,Kerala ,
× RELATED இரவு நேரங்களில் நோயாளிகள் கடும் அவதி...