×

இரவு நேரங்களில் நோயாளிகள் கடும் அவதி கடலூர் அரசு மருத்துவமனையில் சுழற்சி முறையில் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்

*பொதுமக்கள் வலியுறுத்தல்

கடலூர் : கடலூர் அரசு மருத்துவமனையில் சுழற்சி முறையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்படி சுமார் 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, பல் மருத்துவம், கண் மருத்துவம், மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இத்தனை சிகிச்சை பிரிவுகள் இருந்தும் இரவு நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் ஒன்றோ அல்லது இரண்டு மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிப்பதற்காக பணியில் உள்ளனர். அவர்களும் அவசர சிகிச்சைக்காக வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. இதனால் காய்ச்சல், காது, மூக்கு தொண்டை பிரச்னை ஆகியவற்றுக்காக இரவு நேரங்களில் வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

அனைத்து நோய்களுக்குமே அங்கு இருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். ஒவ்வொரு நோய்க்கும் பிரத்தியேகமாக இருக்கும் மருத்துவர்கள் இரவு நேரங்களில் பணியில் இருப்பதில்லை. இதனால் இரவு நேரங்களில் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் வேறு வழி இல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு சென்று அதிக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதேபோல ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை.

இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமம் அடைகின்றனர். இதனால் திங்கட்கிழமைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து புற நோயாளிகள் சீட்டு பெற்று, அதன் பின்னரே மருத்துவரிடம் செல்ல வேண்டும். இதனால் நோய்க்கு சிகிச்சை பெற வரும் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே நோயாளிகளின் நலன் கருதி கடலூர் அரசு மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளிலும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் நியமித்து, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதய நோய்க்கு மருத்துவர் தேவை

கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கடலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான ஏழை மக்கள் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். இந்த மருத்துவமனையில் இதயம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள் இல்லை. இதனால் இதயம் சம்பந்தமான சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். கடலூரில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்வதற்குள் நோயாளிகளுக்கு நோயின் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையில் இதயம் சம்பந்தமான நோய்க்கு மருத்துவர்கள் இல்லாதது வேதனைக்குரிய விஷயமாகும். எனவே இதில் தனி கவனம் செலுத்தி, கடலூர் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இதயம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து, அதற்குரிய மருத்துவர்களை நியமித்து, உரிய உபகரணங்களையும் வாங்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

The post இரவு நேரங்களில் நோயாளிகள் கடும் அவதி கடலூர் அரசு மருத்துவமனையில் சுழற்சி முறையில் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Cuddalore Government Hospital ,Cuddalore ,Manjakuppam ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல்