×

சத்துணவு திட்ட சிறப்பு சபை கூட்டம்

ஈரோடு, ஜூலை 7: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்யவும், திட்டத்தை மேம்படுத்தவும் சத்துணவு மையங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, 38 மாவட்டங்களில் உள்ள 954 சத்துணவு மையங்களில் சமூக தணிக்கை அலகு சார்பில் 2 கட்டங்களாக ஆய்வு நடத்தப்படுகிறது. இதில், முதல் கட்ட ஆய்வு கடந்த 1ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. ஈரோடு இடையன்காட்டுவலசில் உள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் தமிழ்நாடு சமூக தணிக்கை அலகு அதிகாரிகள் 5 நாட்களாக ஆய்வு நடத்தினர். அப்போது, சத்துணவு திட்டத்தில் காலை உணவு, மதிய உணவு தயார் செய்யும் முறைகள், மாணவ-மாணவிகளுக்கு உணவு பரிமாறும் விதம், உணவின் தரம் ஆகிய பணிகளை பார்வையிட்டனர். மேலும், சத்துணவுக்கு தேவையான பொருட்களின் இருப்பு குறித்தும் கேட்டறிந்தனர்.

இந்நிலையில், சத்துணவு திட்டம் தொடர்பான குறைகளை கேட்டறியும் வகையில் சிறப்பு சபை கூட்டம் பள்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தணிக்கை குழு அலுவலர்களும், மாநகராட்சி அதிகாரிகளும் பங்கேற்று சத்துணவு திட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தனர். கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆசிரியர் சங்கத்தினர், மாணவர்கள், பெற்றோர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.அப்போது, சத்துணவு மைய ஊழியர்களின் காலிப்பணி இடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு சமைப்பதற்கு போதுமான இடம் இல்லாமல் சிரமம் ஏற்படுவதால் இடவசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. நாளை 8ம் தேதி முதல் 2ம் கட்ட ஆய்வு வருகிற 12ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

The post சத்துணவு திட்ட சிறப்பு சபை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Special Council of the Sanitation Project ,Erode ,Tamil Nadu ,Special Council of the Ministry of Culture ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளர்கள்...