×
Saravana Stores

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் காரணங்கள் இல்லை.. பிற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம்!!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் காரணங்கள் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி சென்னையில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

ஆம்ஸ்ட்ராங் கொலை: 3 மணி நேரத்துக்குள் 8 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத சிலர் ஆம்ஸ்ட்ராங் மீது கத்தியால் தாக்குதல்
நடத்தியதாக போலீசுக்கு தகவல் வந்தது. சம்பவம் நடந்த இடத்துக்கு காவல்துறையினர் உடனடியாக சென்று ஆம்ஸ்ட்ராங்கை மருத்துவமனை கொண்டு சென்றனர். கொலை நடந்த 3 மணி நேரத்துக்குள் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னை பாலு, அருள், மணிவண்ணன், ராமு உள்ளிட்ட 8 பேர், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலைமை கட்டுக்குள் உள்ளது; தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு முடியும் வரை தேவையான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம், பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

ஆம்ஸ்ட்ராங் கொலை: அரசியல் காரணங்கள் இல்லை
ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். விசாரித்த வரையில் கொலைக்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான பின்னணி குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதற்கு மிக மிக வாய்ப்பு குறைவு. விசாரணையில் கிடைத்த தகவல்களை கூறியுள்ளோம்; முழுமையான விசாரணைக்கு பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என கூறினார்.

ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் என தகவல் இல்லை
ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீசாருக்கு எந்த தகவலும் இல்லை. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற அடிப்படையில்தான் உளவுத்துறை அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்தது.

துப்பாக்கியை திரும்பப் பெற்றுவிட்டார் ஆம்ஸ்ட்ராங்
தேர்தல் நடத்தை விதி காரணமாக போலீசில் ஒப்படைத்த துப்பாக்கியை ஆம்ஸ்ட்ராங் ஜூன் 13-ல் திரும்பப் பெற்றுவிட்டார். ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்குக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 8 பேரில், தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்று தெரிவித்தார்.

ஓராண்டில் மட்டும் 1,192 பேர் மீது குண்டாஸ்
கடந்த 6 மாதங்களில் மட்டும் 769 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 1,192 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 1,192 பேரில் 666 பேர் ரவுடிகள். ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என காவல் ஆணையர் தகவல் தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை
ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் இருந்தன; அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கொலை வழக்குகள் குறைந்துள்ளன. இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் சென்னைதான் என தேசிய குற்ற ஆவண பதிவக தரவுகள் உறுப்படுத்தியுள்ளன. யார் மீது சந்தேகம் உள்ளதாக கூறினாலும் அது குறித்து விசாரணை நடத்தப்படும். பொதுமக்களின் பாதுகாப்பு, குற்றங்களை தடுப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு சென்னை போலீஸ் செயல்பட்டு வருகிறது என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறினார்.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் காரணங்கள் இல்லை.. பிற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Police Commissioner ,Sandeep Rathore ,Chennai ,Sandeep Rai Rathore ,Bagjan Samaj ,President Armstrong ,Dinakaran ,
× RELATED டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க...