×

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

சென்னை; பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னையில் அவரது வீட்டின் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய நபர்களை காவல்துறை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறார். இதற்கு அருகிலேயே தனது பழைய வீட்டை இடித்துக் கட்டி வருகிறார். தினமும் மாலையில் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். அதேபோல, இன்றும் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டுவிட்டு, சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரை அரிவாளாலும் கத்தியாலும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். உடனிருந்த இரண்டு பேருக்கும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது. உடனடியாக செம்பியம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். உடனிருந்த இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டின் வெளியே கொடூரமாக கொல்லப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. வழக்கறிஞரான அவர் மாநிலத்தில் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். தமிழ்நாடு அரசு குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Bagujan Samaj Party ,Mayawati ,Chennai ,Anchad Suresh ,Balu ,Ramu ,Thiruvengadam ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலீஸ் விசாரணை...