ராமநாதபுரம், ஜூலை 6: உறவினரை தாக்கிய வழக்கில் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள நடுத்தெருவை சேர்ந்த சதலிங்கசர்மா மகன் குருசித்தசாமி (39). இவரது சித்தப்பா சானந்த கணேஷ் (73), இவரது மகன் மிருத்யுஞ்ஜெயன் (47). இவர்கள் மூவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
கடந்த 2016-ம் ஆண்டு யாத்ரீகர்களை பூஜைக்கு அழைத்துச் செல்வதில் குருசித்தசாமி மற்றும் சானந்த கணேஷ், மிருத்யுஞ்ஜெயன் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தந்தையும், மகனும் சேர்ந்து தாக்கியதில் குருசித்தசாமியின் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது தொடர்பாக ராமேஸ்வரம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சானந்த கணேஷ், மிருத்யுஞ்ஜெயன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நடுவர் மோகன்ராம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அதில், மிருத்யுஞ்ஜெயனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், முதியவர் சானந்த கணேசுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
The post உறவினரை தாக்கிய வழக்கில் தந்தைக்கு 2 ஆண்டு மகனுக்கு 7 ஆண்டு சிறை: ராமநாதபுரம் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.