* ஆசியாவின் பழைமையான கால்பந்து போட்டியான தூரந்த் கோப்பை கால்பந்து தொடரின் 133வது தொடர் ஜூலை 27ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர்ஜயன்ட் உட்பட மொத்தம் 24 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் பைனல் ஆக.31ம் தேதி நடைபெற உள்ளது. கொல்கத்தா (மேற்கு வங்கம்), கோக்ரஜாரில் (அசாம்) நடந்து வந்த ஆட்டங்கள் இம்முறை ஷில்லாங் (மேகாலாயா), ஜாம்ஷெட்பூரிலும் (ஜார்கண்ட்) நடக்க உள்ளன. நேரடி ஒளிபரப்பு: சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்.
* ருமேனியா சென்றுள்ள இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தா, ‘பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இருந்தாலும், சீனாவில் கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக செஸ் விளையாடியது வித்தியாச அனுபவத்தை தந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டியை போல், ஒலிம்பிக் போட்டியிலும் செஸ் விளையாட்டை சேர்க்கும் காலம் வந்தால் மகிழ்ச்சி அடைவேன். பாரிஸ் ஒலிம்பிக்சில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மீண்டும் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
* இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போல் உலக நாடுகளிலும் உள்ளூர் டி20 போட்டிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவிலும் ‘மேஜர் லீக் கிரிக்கெட்’ டி20 தொடரின் 2வது சீசன் இன்று தொடங்குகிறது. அதில் எம்ஐ நியூயார்க், சியாட்டில் ஆர்காஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், வாஷிங்டன் ஃபிரீடம், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் என 6 அணிகள் பங்கேற்கின்றன. பைனல் இந்திய நேரப்படி ஜூலை 29ம் தேதி காலை 6 மணிக்கு நடக்கும்.
* கனடா ஓபன் பேட்மின்டன் தொடரில் நேற்று காலிறுதிக்கு முந்தய 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரியான்ஷு ராஜ்வத் 21-19, 21-11 என நேர் செட்களில் ஜப்பானின் டகுமா ஒபயாஷியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். இப்போட்டி 38 நிமிடங்களில் முடிந்தது. மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் ஜோடி 17-21, 21-7, 21-8 என நேர் செட்களில் நடாஸ்ஜா அந்தோனிசன் (டென்மார்க்)/அலிஸ்ஸா டிர்டோசென்டோனோ (நெதர்லாந்து) இணையை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
* கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் நேற்று நடந்த முதல் காலிறுதியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா – ஈக்வடார் அணிகள் மோதின. காயம் காரணமாக விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்த நிலையில், மெஸ்ஸி களமிறங்கினார். இப்போட்டி 1-1 என டிரா ஆனதை அடுத்து, பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. முதல் வாய்ப்பை மெஸ்ஸி வீணடித்தாலும், அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் வென்று தொடர்ந்து 3வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.