*சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
தஞ்சாவூர் : காட்சிப்பெருளாக மட்டும் உள்ள தஞ்சாவூர் பெரிய கோயில் கண்காணிப்பு கேமராக்கள் பயனற்று உள்ளது.உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் தமிழர்களின் கட்டடக்கலைக்கும், சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாகும். மேலும் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாகவும் தஞ்சை பெரிய கோயில் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு, வெளிநாடு, வெளி மாநிலம் என ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளும், ஆய்வு மாணவர்களும் வந்து கண்டு ரசித்து செல்கின்றனர்.
கோயிலில் பாதுகாப்புக்கு மத்திய அரசு சார்பில் தனியார் நிறுவன காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயில் நுழைவுவாயிலில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.இந்நிலையில் கோயில் வெளியிலும் உள்ளேயும் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் காட்சி பொருட்களாக உள்ளன. ஒரு சில கேமராக்களில் ஒயர்கள் கூட இல்லை. வெறும் கேமரா மட்டுமே உள்ளது. இதை மத்திய தொல்லியல் துறையினர் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கோயில் கும்பாபிஷேகத்தின்போது மராட்டா கோபுரம் கேரளாந்தகன் கோபுரம் ராஜராஜன் கோபுரம் திருச்சுற்று மாளிகை கோவில் சுற்றுப்பிரகாரம் என கோயில் முழுதையும் கண்காணிக்கும் வகையில் 32 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால் தற்போது பல சிசிடிவி கேமராக்கள் தரையை பார்த்தபடியும் ஒயர்கள் இல்லாமலும் செயல்படாமலும் வெறும் காட்சிப்பொருளாக இருக்கின்றன. கண்காணிப்பு பணிகளில் தொய்வு இருப்பதால் சிலர் சிற்பங்கள் ஓவியங்களில் கிறுக்கி வருகின்றனர். கோயில் உள்பிரகாத்தில் திருட்டு நடந்தாலும் பொருட்களை யாரும் தொலைத்து விட்டாலும் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் தான்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் லட்சுமணகுமார் (63). இவர், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தஞ்சை பெரிய கோயிலுக்கு நேற்றுமுன்தினம் சசுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். லட்சுமணகுமாரின் உறவினர் முதியவர் என்பதால் அவரை சக்கர நாற்காலியில் அமர வைத்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். சக்கர நாற்காலியை அங்கிருந்த ஊழியர் ஒருவர் தள்ளிக் கொண்டு சென்றார். இவர்கள் பெருவுடையார் சன்னதியில் தரிசனம் செய்து விட்டு அருகில் உள்ள மற்ற சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் பிரதோஷம் என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
லட்சுமணகுமார் தனது குடும்பத்தினருடன் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்று விட்டு கடைசியாக பெரியநாயகி அம்மன் சன்னதிக்கு வந்து தரிசனம் செய்து விட்டு மீண்டும் வெளியில் வந்தார்.
பெரிய கோயிலின் நுழைவு வாயில் பகுதியான கேரளாந்தகன் கோபுரம் அருகே வந்த போது சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு வந்தவருக்கு பணம் கொடுப்பதற்காக தனது பையை பார்த்த போது லட்சுமணகுமார் அதிர்ச்சி அடைந்தார்.
லட்சுமணகுமார் கோயிலுக்குள் தரிசனம் செய்த போது கூட்ட நெரிசலை பயன் படுத்தி அவரது டவுசரை பிளேடால் கீறி பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் லட்சுமணகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் திகைத்தனர்.
இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பெரிய கோயிலை சுற்றி உள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டில் இல்லததால் யார் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது தெரியவில்லை. சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டில் இருக்குமே ஆனால் அந்த மர்ம நபர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சுலபமாக இருக்கும்.
எனவே நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதியும் அதேபோல் கோயிலில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் ஓவியங்களின் பாதுகாப்பு கருதியும் உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணிப்பு கேமராக்களை செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post ஆயிரம் ஆண்டு பழமையான பெரிய கோயிலில் கண்காணிப்பு கேமரா செயல்படுமா? appeared first on Dinakaran.