×
Saravana Stores

கோயம்பேடு பார்க்கிங் பகுதியில் ஆம்னி பேருந்துக்கு தீ வைத்தவர் கைது: சிசிடிவி கேமரா பதிவால் சிக்கினார்

அண்ணாநகர்: கோயம்பேடு தனியார் பார்க்கிங்கில் ஆம்னி பேருந்திற்கு தீ வைத்த தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்பேடு மார்க்கெட் அருகே தனியார் பார்க்கிங் பகுதி இயங்கி வருகிறது. இங்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள், சரக்கு லாரிகள், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். இந்நிலையில், பார்கிங் பகுதியில் ஆம்னி பேருந்து ஒன்று கடந்த 7 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று மாலை இந்த ஆம்னி பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அருகே நிறுத்தப்பட்டிருந்த லோடு வேன், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ பரவியது. தகவலறிந்து விரைந்து வந்த கோயம்பேடு தீயணைப்புத்துறை வீரர்கள், சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், ஆம்னி பேருந்து முழுவதுமாக எரிந்தது. லோடு வேன் மற்றும் கார் ஆகியவை சேதமானது.
இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி விடீயோ காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்தின் உள்ளே சென்று தீ வைத்துவிட்டு தப்பிச் செல்வது தெரியவந்தது. விசாரணையில், கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி (45) என்பவர், ஆம்னி பேருந்திற்கு தீ வைத்தது தெரிந்தது.

அவரை நேற்று கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஆம்னி பேருந்திற்குள் சென்ற பழனி, கீழே கிடந்த குப்பை கழிவுகளை தனது காலால் சேகரித்து இருக்கைகளுக்கு அடியில் தீ வைத்துள்ள்ளார். யாரேனும் தூண்டுதலின் பேரில் ஆம்னி பேருந்திற்கு தீ வைத்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கோயம்பேடு பார்க்கிங் பகுதியில் ஆம்னி பேருந்துக்கு தீ வைத்தவர் கைது: சிசிடிவி கேமரா பதிவால் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Omni ,Koyambedu market ,Dinakaran ,
× RELATED பூக்கள் விலை கடும் சரிவு