- கீழ் வேளச்சேரி
- குழு
- சென்னை
- சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம்
- வேளச்சேரி மேம்பாலம்
- வெலாச்சேரி 100 அடி சாலை
- வேளச்சேரி
- சென்னை பெருநகர்
- தின மலர்
சென்னை: வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியில், ரூ.4.5 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் பேருந்து நிலையம் அமைக்க, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது. வேளச்சேரி 100 அடி சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, பிரபல மால் அமைந்துள்ள செக்போஸ்ட் சிக்னல் முதல் விஜயநகர் பேருந்து நிலையம் வரை கல்லூரி, பிரபல நகைக்கடைகள், உணவகங்கள், பெட்ேரால் பங்க், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இதனால், அந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்களால் 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக, விஜயநகர் சந்திப்பு பகுதியில் தினசரி காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து காணப்படும். இப்பிரச்னைக்கு தீர்வாக, அங்கு ஈரடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கியது. இந்த மேம்பாலம், தரமணி இணைப்பு சாலையையும், வேளச்சேரி 100 அடி சாலையையும் இணைக்கிறது.
இது 190 மீட்டர் தூரம் ஆகும். இரண்டாம் அடுக்கு மேம்பாலத்தின் நீளம் 1200 மீட்டர் ஆகும். அங்கு 32 இடைவெளிகள் உள்ளன. அதாவது ஒரு தூணில் இருந்து மறு தூணுக்கு இருக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கும். இந்த மேம்பாலம் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதன்மூலம், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுப்படுத்த, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, ரூ.4.5 கோடியில் வேளச்சேரி பேருந்து நிலைய பகுதியில் ஒரு பேருந்து நிலையம், பூங்கா அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 6 பேருந்துகளை நிறுத்தும் அளவுக்கு பே அமைக்கப்படும். அதுபோல் பயணிகள் காத்திருக்கும் அறை, நடைபாதை, ஆண், பெண்களுக்கு கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கென கழிப்பறைகளையும் அமைக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
அது போல் பொதுமக்கள் புகார் அளிக்கும் மையமும் இருக்கும். பேருந்து நிறுத்தும் இடங்களில் நன்கு வெளிச்சம் தரக் கூடிய எல்இடி விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில், குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், நடைப்பயிற்சிக்கான பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பூங்காவில் கலை வேலைப்பாடுகள், சிற்பங்கள் அமைக்கப்படும். பூங்கா இடங்களில் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்படும்.
அதேபோல் நடைபாதையில், நல்ல வெளிச்சம் தரக்கூடிய எல்இடி விளக்குகள் வைக்கப்படும். நடக்கும் போது வழுக்காமல் இருக்கும் வகையில், டைல்ஸ்கள் ஒட்டப்படும். பூங்கா முழுவதும் நிறைய மரங்கள், செடிகள், புற்கள் அமைக்கப்படும். நீருற்றும் அமைக்கப்பட்டு, அதன் மூலம் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது போல் ஏற்படுத்தப்பட உள்ளது. மேம்பால தூண்கள் மற்றும் கீழ் பகுதிகளிலும் அழகுக்காக ஓவியங்கள் வரையப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* ரூ.11.2 கோடி ஒதுக்கீடு
சென்னையில், வேளச்சேரி மேம்பாலம் மற்றும் ரெட்டேரி, வில்லிவாக்கம், பாடி, வடபழனி ஆகிய மேம்பாலங்களை அழகுபடுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.11.2 கோடி ஒதுக்கப்பட்டு, 3,086 நீளத்தில், ஓவியங்கள் வரைவது, புல்தரை, அழகு செடிகள், செயற்கை நீரூற்று, எல்இடி விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
வண்ணமயம்
சென்னையை சிங்கார சென்னையாக மாற்றும் விதத்தில் பொது இடங்களில் பூங்காக்கள் அமைப்பது, சுவர்களில் ஓவியங்கள் வரைவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சிங்கார சென்னை 2.0 என்ற பெயரில் மேலும் சென்னை அழகுப்படுத்தப்படுகிறது. ஆங்காங்கே மின் விளக்குகள், செயற்கை நீருற்றுகள், என சென்னையே இரவு நேரத்தில் கூட வண்ணமயமாக காட்சியளிக்கிறது. இதேபோல் பொது இடங்களில் கட்டண கழிப்பிடம், ஏராளமான பூங்காக்கள், மெட்ரோ ரயில்கள் என நவீனமயமாகி வருகின்றன.
The post வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரூ.4.5 கோடியில் பூங்கா பேருந்து நிலைய பணி: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டம் appeared first on Dinakaran.