- பாஜா
- ஆல்எஸ் முகாம்
- தில்லி
- புதுச்சேரி
- பிரதம
- அமைச்சர்
- கூட்டணி ஆட்சி
- காங்கிரஸ்
- சட்டமன்ற உறுப்பினர்
- வைத்தியநாதன்
- முதல் அமைச்சர்
- ரங்கசாமி
- தில்லி. என்.
- புதுச்சேரி ஆர்.
- பஜாஜ்
- புதிய கூட்டணி ஆட்சி
- தின மலர்
புதுச்சேரி: பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் தலைமையில் நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை நேற்று திடீரென சந்தித்து பேசினர். புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குபின் தேஜ கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேர் டெல்லி சென்று கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவிடம் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
டெல்லியில் 3 நாட்களாக முகாமிட்டுள்ள எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், அங்காளன், கொல்லப்பள்ளி நிவாஸ் அசோக் ஆகியோர் நேற்று மதியம் பாஜ அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷை சந்தித்து பேசினர். அப்போது முதல்வர் ரங்கசாமி மீது சரமாரி புகார் கூறினர். இதுபற்றி பாஜ அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய். ஜெ சரவணன்குமார் ஆகியோரிடம் கேட்பதாகவும், வரும் 8ம் தேதிக்குள் நல்ல தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க அங்கு காத்திருக்கின்றனர்.
வாரிய தலைவர் கேட்டு அரசுக்கு நெருக்கடி கொடுப்பதோடு, கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்ற முடிவுக்கு பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் வந்திருப்பது முதல்வருக்கு டென்ஷனை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. இதனால் பாஜவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள ரங்கசாமி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் பாஜவை கழற்றிவிட்டு ஆட்சியமைக்க ரகசிய தூது அனுப்பி உள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு காங்கிரஸ் மாநில தலைவரான வைத்திலிங்கம் எம்பி நேற்று முத்தியால்பேட்டை தொகுதியில் நன்றி தெரிவித்தார். அப்போது மாநில வளர்ச்சி தொடர்பாக முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளிக்க இருப்பதாக கூறினார். அதே நேரத்தில் ஆட்சி மாற்றத்திற்கெல்லாம் காங்கிரஸ் தயாராக இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
ரங்கசாமியுடனான உறவில் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை நாடாளுமன்ற தேர்தலுக்குபின் மாறியிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எதிர்கால அரசியலுக்காக முதல்வருடன் இணக்கமாக செல்லும் சூழலை ஏற்படுத்த காங்கிரஸ் விரும்பலாம் எனவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.
இதனிடையே நேற்று காலை காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், காங்கிரஸ் கட்சி சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், பொதுச்செயலாளர் இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் உள்ள அவரது அறையில் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அவர்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.
இந்த சந்திப்புக்குபின் அதிருப்தி பாஜ எம்எல்ஏக்கள் டெல்லியில் ஜே.பி.நட்டாவை சந்தித்து சரமாரி புகார்கள் கூறியது குறித்து முதல்வரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரங்கசாமி, ‘பாஜ எம்எல்ஏக்கள் அவர்களின் தலைமையை சந்திக்கிறார்கள். அது அவர்களது விருப்பம். புதுச்சேரியில் அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து நிலைகளிலும் மாநிலத்தை சிறப்பு மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்’, என்றார். மேலும் வாரிய தலைவர் பதவிகளை நிரப்புவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் பதில் அளிக்காமல் சென்றார்.
The post பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாம்; புதுச்சேரி முதல்வருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு: புதிய கூட்டணி ஆட்சிக்கு முயற்சியா? appeared first on Dinakaran.