×
Saravana Stores

பழைய துணி தைக்க வருவதுபோல் நடித்து முகத்தில் மயக்க பொடி தூவி பெண்ணிடம் பணம் பறிப்பு: பர்தா அணிந்து வந்த 2 பெண்களுக்கு வலை

திருவொற்றியூர்: தண்டையார்பேட்டையில் பழைய துணி தைக்க வருவதுபோல் நடித்து, பெண்ணின் முகத்தில் மயக்க பொடி தூவி பணம் பறித்து தப்பிய 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். கொருக்குப்பேட்டை பெருமாள் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி அமுதா(45). இவர் தண்டையார்பேட்டை மேயர் பாசுதேவ் தெருவில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு ஆட்டோவில் பர்தா அணிந்து வந்த 2 பெண்கள், பழைய துணியை தைத்துத் தருமாறு கூறியுள்ளனர். அதற்கு பழைய துணிகளை தைப்பதில்லை என அமுதா மறுத்துள்ளார்.

அப்போது அமுதாவின் முகத்துக்கு அருகில் வைத்து துணியை உதறியுள்ளனர். அதிலிருந்து சிதறிய பவுடர் அமுதா முகத்தில் படவே, அவர் சற்று நேரத்தில் மயங்கினார். பின்னர் பர்தா அணிந்த பெண்கள் 2 பேரும், அமுதாவின் கைப்பையை தூக்கிச் சென்றனர். அதில், ரூ.25 ஆயிரம் ரொக்கம், ஏடிஎம் கார்டு, நகை அடகு வைத்த ரசீது, பீரோ சாவி உள்ளிட்டவை இருந்துள்ளன. இதுகுறித்து அவர் தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பர்தா அணிந்து வந்த பெண்களை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பழைய துணி தைக்க வருவதுபோல் நடித்து முகத்தில் மயக்க பொடி தூவி பெண்ணிடம் பணம் பறிப்பு: பர்தா அணிந்து வந்த 2 பெண்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Purushothaman ,Korukuppet Perumal Garden ,Amuda ,
× RELATED சென்னை திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு: 35 மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு