- கே.ஜி கண்டிகை
- திருத்தணி
- கேஜி கண்டிகை நொச்சிலி சாலை
- திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்
- கேஜி காண்டிகாய்
- தின மலர்
திருத்தணி: திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை வாரசந்தை மைதானத்தில் கொட்டப்படும் இறைச்சி மற்றும் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை நொச்சிலி சாலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம், நெல் கொள்முதல் நிலையம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் வியாபாரிகள் 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கே.ஜி.கண்டிகை சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வார சந்தைக்கு வந்து காய்கறிகள், பழங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி செல்கின்றனர். மேலும், வேளாண்மை விரிவாக்கம் மையத்திற்கு தினமும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் வருகை தந்து விதைநெல் வாங்கி செல்கின்றனர். அதேபோல், விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் வாகனங்களில் கொண்டு வந்து, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கே.ஜி.கண்டிகை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் சேகரிக்கும் குப்பை கழிவுகள் பல ஆண்டுகளாக வாரசந்தை, அரசு அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றது.
மேலும் கடை வியாபாரிகள், திருமண மண்டபங்களிலிருந்து இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பை கொட்டுகின்றனர். இதனால் குப்பை மலைப்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகின்றது. வார சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் துர்நாற்றம் வீசுவதால், மூக்கு மூடிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைகாலம் தொடங்க உள்ள நிலையில் குப்பை கழிவுகளால், நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து வாரசந்தை, அரசு அலுவலக வளாகத்தில் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
The post கே.ஜி.கண்டிகை வாரசந்தை மைதானத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் தொற்றுநோய் அபாயம்: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.