கொல்கத்தா : மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண், இது பற்றி காவல்துறையினர் முழுமையான விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேற்கு வங்க ஆளுநர் சி வி ஆனந்த் போஸ், தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆளுநர் மாளிகை பெண் ஊழியர் புகார் கொடுத்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இருக்கும் பதவியை விட மேலான பதவியை கொடுப்பதாக கூறி ஆளுநர் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் புகார் அளித்தார். இது முற்றிலும் பொய்யான புகார் என்றும் ஆனந்த் போஸ் ஏற்கனவே மறுத்து இருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். 361-வது பிரிவின் கீழ் ஆளுநர் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து விடுபடுவதை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ள பெண் ஊழியர், பாலியல் துன்புறுத்தலும் ஆளுநரின் கடமைக்குள் தான் வருகிறதா என்பது பற்றி நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரிவு 361-ன் கீழ் தன் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டிலிருந்து ஆளுநர் தன்னை விடுவித்துக் கொள்ள அதிகாரம் உள்ளதா என்பது குறித்து வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 361வது சட்டப்பிரிவு போலீசாரின் அதிகாரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் எனவே மேற்கு வங்க போலீசார் தம்முடைய புகார் பற்றி முழுமையாக விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் பெண் ஊழியர் கோரிக்கை விடுத்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட ஆளுநர் பதவியில் இருந்து விலகும் வரை பாதிக்கப்பட்டவர் காத்திருக்க வேண்டும் என்பது அநீதியானது என்றும் மனுவில் அவர் கூறியுள்ளார்.
The post மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தை நாடிய பெண் ஊழியர் appeared first on Dinakaran.