×
Saravana Stores

ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி, வீதியாக பிரசாரம்

விழுப்புரம், ஜூலை 4: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவிற்கு அதிமுக யாரும் ஆதரவளிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி ரகசிய உத்தரவு போட்ட நிலையில் பாமகவினர் தற்போது ஜெயலலிதா புகைப்படத்தை போட்டு வீதி, வீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும் 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, தேஜா கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் அபிநயா மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பின்வாங்கிய நிலையில் இடைத்தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளது. அதுவும் தேர்தல் பிரசாரம் 8ம் தேதி மாலை 5 மணிக்கு முடிவடைவதால் இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேஜ கூட்டணியில் பாமக வேட்பாளரை ஆதரித்து இதுவரை கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. பாமக ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, அவரது மனைவி சௌமியாஅன்புமணி உள்ளிட்டவர்கள் சுற்றி, சுற்றி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி இந்த தேர்தலில் அதிமுகவினர் தங்கள் வாக்குகளை பாமகவுக்கு அளிக்க வேண்டும், ஆதரவு தர வேண்டும் என்று பேசி வாக்கு சேகரித்து வருகிறார். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், நேற்று முன்தினம் பாமகவுக்கு அதிமுகவினர் ஆதரவு அளிக்க வேண்டாம் என்று ரகசிய உத்தரவு போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவினர் ஓட்டுகளை எப்படியாவது வாங்குவதற்காக ஜெயலலிதாவின் புகைப்படத்தை பெரியதாக அச்சடித்து தேர்தல் பிரசார நோட்டீஸ்களிலும், பிரசார மேடை பொதுக்கூட்ட இடங்களில் வைக்கப்பட்ட பேனர்களிலும் பிரமாண்டமாக வைத்து அதிமுகவினர் வாக்குகளை கவர புது வியூகத்தில் ஈடுபட்டு வருகிறார்களாம்.

விக்கிரவாண்டி, காணை பகுதிகளில் நடந்த பாமக பிரசார நிகழ்ச்சிகளில் மோடி படத்தை விட அவருக்கு மேல் ஜெயலலிதாவின் படத்தை போட்டு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்களாம். கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று தேஜ கூட்டணிக்கு சென்ற பாமக தற்போது ஜெயலலிதாவின் புகைப்படத்தை போட்டு எப்படி பிரசாரம் மேற்கொள்ளலாம் என அதிமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர். இடைத்தேர்தல் பிரசாரத்தில் டெபாசிட்டை தக்க வைக்க கடைசியில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை போட்டு பாமக ஓட்டு சேகரித்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாமகவை கலாய்த்து வருகிறார்களாம். இதனிடையே பாமக தரப்பில் கூறுகையில், தேஜ கூட்டணியில் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அமமுக டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஜெயலலிதாவின் புகைப்படத்தை போட்டு தான் இயக்கத்தை வழிநடத்தி வருகிறார்கள். எனவே கூட்டணி கட்சி என்பதால் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பதிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

The post ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி, வீதியாக பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Bamakavinar ,Jayalalitha ,Villupuram ,Vikravandi ,Edappadi Palanichamy ,AIADMK ,BAMAK ,Villupuram district ,Vikravandi DMK ,Pamagavinar road ,Dinakaran ,
× RELATED ஜெயலலிதா, கலைஞரை விட விஜய் பெரிய தலைவரா?.. சீமான் கேள்வி