சென்னை: சிறையில் இருந்தபடியே போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மெத்தபட்டமைன் கடத்தலில் கைதாகி சிறையில் உள்ள காசிலிங்கம் என்பவர் தனது மனைவியுடன் ஒருங்கிணைந்து, செங்குன்றத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் அருகே மெத் சரக்குக்கான பிக்கப் பாயிண்டை அமைத்துள்ளார் என்றும், போதைப்பொருள் விற்பனை குறித்து சிறையில் இருந்தவாறே தனது மனைவியிடம் வீடியோ காலில் பேசியுள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. சிறைத்துறை அதிகாரிகள் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்தார்களா? இல்லை போதைப்பொருள் விற்பனைக்கு துணை போனார்களா என தெரியவில்லை என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
சென்னையில் உள்ள மிக முக்கியமான புழல் சிறையில் உயர் அந்தஸ்தில் பல அதிகாரி இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சிறைத்துறையும், காவல்துறையும் விழித்துக்கொண்டு சிறைவாசி யார், யாருக்கு பேசினார், யார் அவருக்கு மெத்தபட்டமைன் விநியோகித்தது, அதற்கு பணப்பரிமாற்றம் எப்படி நடந்தது என்பதை கண்டறிந்து, இந்த குற்ற சம்பவத்தின் மூலக் குற்றவாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் சட்டத்தின் பிடியில் ஒப்படைத்து, கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். இதில் மத்திய அரசும் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post சிறையில் இருந்தபடி போதைப்பொருள் விற்பனை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.