×
Saravana Stores

திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் நீட் தேர்வு விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்படும்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிட வலியுறுத்தியும், நீட் தேர்வில் நடந்தேறிய மோசடிகளுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக மாணவர் அணி சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ தலைமை வகித்தார். சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நே.சிற்றரசு, தலைமை நிலைய அலுவ­ல­க செய­லா­ளர்­ பூச்சி முருகன், மாணவர் அணி தலைவர் இரா.ராஜீவ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மருத்துவர் அணி செயலளர் என்.எழிலன், திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரஸ் பெரியார், பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கூட்டணி மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், நீட் என்னும் அநீதியை ரத்து செய் என்ற பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் எழிலரசன் பேசுகையில், ‘‘நீட் தேர்வை ஒழிக்கும் வரை திமுக மாணவர் அணி ஓயாது, தேவைப்பட்டால் இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் இந்த போராட்டத்தை எடுத்து செல்வோம்’’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு அகில இந்திய பிரச்னையாக மாறியுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேள்வி எழுப்பியபோது விவாதத்திற்கு எடுத்து கொள்ளலாம் என்று சபாநாயகர் கூறினார். ஆனால் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை முடித்துக் கொண்டு போய் விட்டார்கள் என்றால் இதற்கெல்லாம் பதில் சொல்ல பயப்படுகிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு காலத்தில் திமுக மட்டுமே நீட் பற்றி பேசிக் கொண்டிருந்தது. இன்று அனைத்து கட்சிகளும் பேசுகிறார்கள். நடிகர் விஜய், தாமாக முன்வந்து தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளார். ராகுல் காந்தி இந்த நீட் தேர்வு ரத்தை அகில இந்திய அளவில் கொண்டு சேர்த்துள்ளார். விரைவில் நல்ல முடிவு வரும். இவ்வாறு கூறினார்.

* ரூ.167 கோடி தங்க கடத்தல் விவகாரத்தில் அண்ணாமலை பதில்அளிக்க வேண்டும்
மேலும் நிருபர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ‘‘ரூ.167 கோடி மதிப்புள்ள தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியதில் தொடர்பு உள்ளதாக மோடியின் படம், நிர்மலா சீதாராமன் மற்றும் அண்ணாமலையின் படங்கள் வந்துள்ளன. எடப்பாடி படமும் வந்துள்ளது. ஒரே ஒரு சாராய வியாபாரியுடன் போட்டோ இருந்ததற்கு பெரும் ஆர்ப்பாட்டம் செய்த அண்ணாமலை தற்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?. எனவே அண்ணாமலை ரூ.167 கோடிக்கு முதலில் பதில் சொல்ல வேண்டும்’’ என்றார்.

The post திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் நீட் தேர்வு விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்படும்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK ,RS Bharati ,Chennai ,Union BJP government ,Tamil Nadu Legislative Assembly ,.Bharti ,
× RELATED ஆர்.எஸ்.பாரதி மீது யூடியூபர் சங்கர்...