?சுப நிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையைத் தேர்ந்தெடுப்பது ஏன்?
– என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரஹங்களுமே மனித வாழ்வியலோடு நெருங்கிய தொடர்பு உடையவை. இதில் சந்திரன்தான் மனதை ஆளக்கூடியகிரஹம். சந்திராஷ்டமம் எனும் காலம் மனதில் குழப்பத்தை உண்டாக்கவல்லது என்பதால்தான், சந்திராஷ்டம நாளில் யாரும் முக்கியமான பணிகளைச் செய்வதில்லை. அதே போல, தேய்பிறையைவிட வளர்பிறை நாள் என்பது சந்திரனின் வலிமை பெற்றது என்பதால் வளர்பிறை நாட்களை வளர்ச்சியைத் தரும் நாட்களாகப் பார்க்கிறார்கள். வளர்பிறை நாட்களில்கூட சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய நாட்களும், தேய்பிறையாக இருந்தாலும், திவிதியை, திருதியை, பஞ்சமி ஆகிய நாட்களும் சுபநிகழ்ச்சிகளை செய்வதற்கு ஏற்றவையே.
?மச்சங்களுக்கும் மனித வாழ்க்கைக்கும் தொடர்பு உண்டா?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
மச்சங்களுக்கும், மனிதனின் குண நலன்களுக்கும் இடையே தொடர்பு
என்பது உண்டு. சாமுத்ரிகா லட்சணம் பற்றிய பாடத்தில் அங்க லட்சணம் பற்றிய பிரிவில், இந்த மச்சக்குறி சாஸ்திரம் என்பது விரிவாகப் பேசப்படுகிறது. மச்சம் என்பது மருத்துவ ரீதியாக இன்னமும் ஆராயச்சியில்தான் இருந்து கொண்டிருக்கிறது. ஒரு சில அறிவியலாளர்கள், மச்சம் என்பதை இறந்துபோன ரத்த சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று சொல்வார்கள். நமது உடலில் எந்த அங்கத்தில் மச்சம் இருக்கிறதோ, அதற்கு ஏற்றாற்போல் மனிதனின் குண நலன் என்பது அமைகிறது. உதாரணத்திற்கு, நெற்றியில் மச்சம் இருந்தால் புகழ், வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் மன சந்தோஷம், நாக்கில் மச்சம் இருந்தால் கடுஞ்சொல், உதட்டில் மச்சம் இருந்தால் பொய் பேசுதல் போன்ற பலன்களைச் சொல்லியிருப்பார்கள். ஆக, மச்சம் என்பது மனிதனின் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டிருக்கிறது என்று சொல்வதைவிட மனிதனின் குணநலன்களோடு தொடர்பு உடையது என்று சொல்வதே சரியாக இருக்கும்.
?பெண்கள் கால்களில் ஒரு விரலில்மட்டும்தானே மெட்டி அணிய வேண்டும், ஆனால் ஐந்து விரல்களிலும் அணிகிறார்களே, இது சரியா?
– எம்.மனோகரன், ராமநாதபுரம்.
கால் விரல்களில் மெட்டி மாத்திரமல்ல, கைவிரல்களில் மோதிரம் அணி வதுகூட ஐந்து விரல்களிலும் அணியக் கூடாது. மோதிரத்தை மோதிர விரலில் மட்டும்தான் அணிய வேண்டும். அதே போல, மெட்டி என்பதும் கால் பெருவிரலுக்கு அருகில் உள்ள இரண்டாவது விரலில்தான் அணிய வேண்டும். ஒரு சில சம்பிரதாயங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவதாகிய நடுவிரலிலும் சேர்த்து அணியும் பழக்கமும் உண்டு. இந்த இரண்டு விரல்கள் தவிர மற்ற விரல்களில் மெட்டி அணிவது என்பது நம் சம்பிரதாயத்தில் இல்லை.
?இந்த ஜென்மத்தில் நமக்கு கிடைத்த குடும்ப உறுப்பினர்கள் அடுத்த ஜென்மத்திற்கும் தொடர்வார்களா?
– ஆர்.உமாகாயத்ரி, நெல்லை.
மனிதப் பிறப்பிற்கும் அந்த பரம்பரைக்கும் நிச்சயம் தொடர்பு என்பது உண்டு. உதாரணத்திற்கு, எங்க அம்மாவே எனக்கு பேத்தியாக வந்து பொறந்திருக்கா என்று தாத்தாக்கள் பெருமையாக சொல்வதைக் கேட்டிருப்போம். அதேபோல, ஆதர்ஷ தம்பதிகளாக இருப்பவர்களை இது ஜென்ம ஜென்மமாகத் தொடரும் பந்தம் என்று சொல்வதையும் கேட்டிருப்போம். ஜோதிட சாஸ்திரத்திலேகூட இதற்கென தனியாக ஒரு விதிமுறை என்பதுண்டு. அதாவது, ஒரு ஆணுக்கு ஏழாம் பாவக அதிபதி அமர்ந்திருக்கும் இடம் பெண்ணின் ராசியாகவும் பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் பாவக அதிபதி அமர்ந்திருக்கும் இடம் ஆனது ஆணின் ராசியாகவும் அமைந்திருந்தால், அது பூர்வ ஜென்ம பந்தத்தின் காரணமாக இந்த ஜென்மாவிலும் வாழ்வில் ஒன்றிணைந்திருக்கிறார்கள் என்றும், இந்த உறவு இன்னும் அடுத்த ஜென்மத்திற்கும் தொடரும் என்றும் மிருகண்டு வாக்கியம் சொல்கிறது. ஆக, பந்தம் எனும் குடும்ப உறவு என்பது பூர்வ ஜென்மத்தோடு தொடர்பு உடையது எனும்போது இது அடுத்த ஜென்மாவிலும் தொடரும் என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
?சில கோயில்களில் தேங்காய் நீரை தீர்த்தமாகத் தருகிறார்களே?
– வண்ணை கணேசன், சென்னை.
இதில் தவறு ஒன்றும் இல்லையே. இறைவனுக்கு அர்ச்சனை செய்யும்போது நைவேதியத்திற்காக தேங்காயை உடைக்கிறார்கள். அதிலிருந்து வெளிப்படும் நீரையும் இறைவனின் பிரசாதமாக நமக்குத் தருகிறார்கள். இறைவனின் சந்நதியில் நைவேதியம் செய்யப்பட்டு தரப்படும் அனைத்து பொருட்களுமே அருட்பிரசாதம்தான். தேங்காயில் உள்ள நீர் என்பது இயற்கையாகவே இறைவனின் திருவருளால் உண்டானது என்பதால், அதனை தீர்த்தமாக வாங்கி உட்கொள்வது என்பது முற்றிலும் சரியே.
?பணிக்காக கணவர் அதிகாலை வெளியூர் கிளம்பிய பிறகு, மனைவி வாசல் தெளித்து கோலமிடுவது சரியா?
– கிரிதரன், திருவண்ணாமலை.
நிச்சயமாகச் சரியில்லை. உங்கள் கேள்வியிலேயே பதிலும் ஒளிந்துள்ளது. பணிக்காக கணவர் அதிகாலையில் வெளியூர் கிளம்புகிறார் என்கிறீர்கள். கோலம் போடுவது என்பதே அதிகாலையில் செய்ய வேண்டிய ஒன்று. ஆக, கணவர் கிளம்புவதற்கு ஒரு பத்து நிமிடம் முன்னதாக வாசல் தெளித்து கோலமிடுவதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது? ‘டாட்டா பய் பய்..’ என கைகளை ஆட்டி கணவரை வழியனுப்புவதில் இன்பம் காணும் பெண்கள், அதற்கு முன்னதாக வாசல் தெளித்து கோலமிடுவதிலும்கவனம் கொள்ள வேண்டும். கணவர் மட்டுமல்ல, பிள்ளைகள் அல்லது வீட்டிற்கு வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள் எவராயினும் அவர் கிளம்பியவுடன் தலைக்கு ஸ்நானம் செய்வதோ, வீட்டினை அலம்புவதோ, வாசல் தெளிப்பதோ கண்டிப்பாக செய்யக் கூடாது.
?சிலர் வீடுகளில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி இருப்பது சரிதானா?
– சதாசிவம், கோவை.
சரியில்லை. கோலம் இடுவது என்பதே, வீட்டினில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த நாட்களில் தினசரி வீட்டு வாயிலில் சாணம் கரைத்துத் தெளித்துப் பெருக்கிய பின்னர், அழகாகக் கோலமிடுவார்கள். பசுஞ்சாணம் நோய்தரும் கிருமிகளை அண்டவிடாது. வாசலில் சாணம் கரைத்துத் தெளிப்பதால், அந்த வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் சிறக்கிறது. இன்றைய நவீன உலகில் உங்கள் ஊரான கோயமுத்தூர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றளவும் அந்தப் பழக்கத்தைக் கடைப்பிடித்து வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். வீட்டிற்குள்ளும் அவ்வப்போது துடைத்துக் கோலம் போடும்போது, வீடும் சுத்தமாகிறது. பச்சரிசி மாவினால் கோலம் போடுவதே சாலச் சிறந்தது. ஸ்டிக்கர் கோலங்களை பீரோ மற்றும் சுவர் பகுதிகளில் ஒட்டி வைத்துக் கொள்ளலாம். மாறாக, பணிச்சுமையைக் குறைத்துக் கொள்வதாக எண்ணி தரையில் ஸ்டிக்கர் கோலங்களை ஒட்டி வைப்பது முற்றிலும் சரியில்லாத ஒன்று.
The post சிலர் வீடுகளில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி இருப்பது சரிதானா? appeared first on Dinakaran.