×
Saravana Stores

“அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாஜக ஆட்சி தான்” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: அடுத்த 20 ஆண்டுகளுக்கு பாஜக அரசு தான் மத்தியில் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு மக்களவையில் பிரதமர் மோடி நேற்று பதில் அளித்த நிலையில் இன்று மாநிலங்களவையில் பதிலுரை அளித்தார். அப்போது பேசிய அவர்; 3-வது முறையாக நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியை நம்பி மக்கள் 3ஆவது முறையாக வாய்ப்பு அளித்துள்ளனர். 60 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. 3ஆவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கிறார்கள். தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஒரு சிலர் ஏற்க மறுக்கின்றனர்; இந்தியாவின் அரசமைப்பை எப்போதும் புனிதமாக கருதுபவன் நான். அரசமைப்பு நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். அரசியல் சாசனம் என்பது வெறும் விதிகளை உள்ளடக்கிய தொகுப்பு மட்டுமல்ல, அது நம்முடைய உணர்வு மற்றும் ஆன்மா. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு இந்திய அரசியல் சாசனமே பாதை அமைத்துக் கொடுத்தது . நமது இந்திய அரசியல் சாசனம் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது

மதம் சார்ந்த அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர். தேர்தலில் நாட்டு மக்களின் விவேகமான அறிவு கூர்மையை நினைத்து கர்வம் ஏற்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை மாணவர்கள் நன்றாக புரிந்துகொண்டு, விவாதங்களில் ஈடுபடவேண்டும் என்பதே எனது விருப்பம். இந்தியாவை பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு முன்னேற்றும் உத்தரவை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களின் வாழ்வை மேம்படுத்திவருகிறோம். பெருந்தொற்று காலத்திலும் இந்திய பொருளாதாரத்தை 10வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளோம்.

சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா உலளவில் 3வது வளர்ந்த நாடு என்ற இலக்கை எட்டும். கடந்த 10 ஆண்டுகளை விட நாட்டின் வளர்ச்சி இனி வரும் 5 ஆண்டுகள் சிறப்பாக இருக்கும். ஏழை மக்கள் நலனுக்கான திட்டங்களை அதிகளவில் மத்திய அரசு முன்னெடுக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் பொதுப் போக்குவரத்து துறையில் மாபெரும் மாற்றங்கள் கொண்டு வரப்படும். நாடு முழுவதும் உள்ள சிறிய கிராமங்களுக்கும் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த ஆட்சி அமையும். மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றிவரும் நிலையில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர்.

கடும் அமளிக்கிடையே மாநிலங்களவையில் பிரதமர் மோடி தொடர்ந்து பேசினார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி தலைவர் கார்கேவை பேச அனுமதிக்காததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி; அதிக அளவில் குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில் விவசாயிகளின் விலை பொருட்களை கொள்முதல் செய்து புதிய சாதனை படைத்துள்ளோம். ஏறத்தாழ 11 லட்சம் கோடி மதிப்பிலான உர மானியத்தை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.

உலகின் பல்வேறு நாடுகளில் உரங்களின் விலை உயர்ந்த போது, அது நமது விவசாயிகளை பாதிக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. அனைவருக்குமான பூ வளர்ச்சி என்பதே எங்களது தாரக மந்திரம். மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டத்தை இயற்றியுள்ளோம். அடுத்த 20 ஆண்டுகளுக்கு பாஜக அரசு தான் மத்தியில் இருக்கும் என்று கூறினார்.

The post “அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாஜக ஆட்சி தான்” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,PM Modi ,Delhi ,Modi ,President ,
× RELATED நாட்டின் இளைஞர்களுக்கு அதிகபட்ச...