×

ஊராட்சி ஒன்றிய நிதியில் முறைகேடு

சேலம், ஜூலை 2:சேலம் அருகே ஊராட்சி ஒன்றிய நிதியில் முறைகேடு செய்ததாக, அதிமுக சேர்மன் மீது புகார் மனு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், சங்ககிரி அடுத்த கன்னந்தேரியைச் சேர்ந்த வடிவேலு என்பவர் மனு அளிக்க வந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கொங்கணாபுரம் அடுத்த கச்சுபள்ளி பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு பராமரிப்பு பணி மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டு, பணிகள் செய்யாமல் இருந்தது. இதுகுறித்து கொங்கணாபுரம் பிடிஓ அலுவலகத்தில் கேட்டபோது, முறையாக பதில் தராமல் தட்டிக் கழித்தனர். கடந்த 10 ஆண்டுகளில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட பகுதியில் வளர்ச்சித் திட்ட பணிகளில் முறைகேடு நடந்துள்ளது. அதிமுக பிரமுகர் சேர்மனாக உள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு சரிவர பதில் அளிக்காததுடன், மிரட்டல் விடுத்தனர். எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். இதேபோல், ஓமலூர் அடுத்த மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், மயானத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

The post ஊராட்சி ஒன்றிய நிதியில் முறைகேடு appeared first on Dinakaran.

Tags : Salem ,AIADMK ,Salem district ,Vadivelu ,Kannanderi ,Sangakiri ,Dinakaran ,
× RELATED எஸ்.பி., அலுவலகத்தில் ஐஜி வருடாந்திர...