×
Saravana Stores

அடுக்கடுக்காக பிரச்னைகளை எழுப்பி மக்களவையில் பாஜவை திணறடித்த ராகுல்: 100 நிமிட பேச்சால் அவையில் அனல் பறந்தது

* பத்தாண்டுகளாக விவாதத்தில் பங்கேற்காத மோடியையும் எழுந்து பதிலளிக்க வைத்தார்
* அமித்ஷா உள்ளிட்ட 9 மூத்த அமைச்சர்கள் பதற்றத்துடன் பலமுறை குறுக்கீடு

புதுடெல்லி: மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவராக பேசிய ராகுல் காந்தி, அடுக்கடுக்காக பிரச்னைகளை எழுப்பி பாஜவை திணறடித்தார். ராகுலின் 100 நிமிட பேச்சால் அவையில் அனல் பறந்தது. கடந்த 10 ஆண்டுகளாக விவாதத்தில் நேரடியாக பங்கேற்காத பிரதமர் மோடி எழுந்து நின்று ராகுலின் பேச்சை குறுக்கிட்டார். அமித்ஷா உள்ளிட்ட 9 மூத்த அமைச்சர்கள் பலமுறை பதற்றத்துடன் குறுக்கிட்டனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2 நாள் விடுமுறைக்குப் பின் நேற்று மீண்டும் தொடங்கியது. மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார். இதில், முதல் முறையாக மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரசின் ராகுல் காந்தி பேசினார். சிவபெருமான், குருநானக், ஏசு படத்துடன் தனது உரையை தொடங்கினார். அப்போது, அவையில் எந்த பதாகைகளையும் காட்டக் கூடாது என விதிமுறையை சபாநாயகர் ஓம்பிர்லா நினைவுபடுத்தினார்.

அதே சமயம், அவையில் பாஜவினரின் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களுக்கு மத்தியில் ராகுல் பேசியதாவது: சிவபெருமானின் படத்தை நான் ஏன் காட்டுகிறேன் என்றால், இதில் கூறப்படும் யோசனைகளை எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் பின்பற்றுகிறோம். சிவனின் கழுத்தில் உள்ள பாம்பு உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும், அதிலிருந்து பின்வாங்கக் கூடாது என்கிறது. அந்த உணர்வுடன் நாங்கள் செயல்படுகிறோம். எதிர்க்கட்சியாக இருப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது. ஆனால் உங்களுக்கு அதிகாரம் மட்டுமே முக்கியம்.

அச்சமின்மை, அகிம்சையை சிவன் உணர்த்துகிறார். உண்மையும், அகிம்சையும் மகாத்மா காந்தியின் யோசனைகள். கடவுளுடன் நேரடி தொடர்பு கொள்ளும் பிரதமர் மோடி, காந்தி இறந்து விட்டதாகவும், ஆவணப்படம் மூலமே உலகம் காந்தியை அறிகிறது என்றும் கூறுகிறார். காந்தி இறக்கவில்லை, உண்மை, அகிம்சை மூலம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதிலிருந்து உங்கள் அறியாமையை புரிந்து கொள்ள முடிகிறதா? இந்து மதம் மட்டுமல்ல, இஸ்லாம், பவுத்தம், சமணம், சீக்கியம் என அனைத்து மதங்களும் தைரியத்தை போதிக்கின்றன. ஆனால் தங்களை இந்துக்கள் என்று கூறிக் கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு, பொய்யை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். 24 மணி நேரமும் வெறுப்பை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இந்துக்களே அல்ல. பாஜவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். அதனால்தான், ராமர் பிறந்த அயோத்திலேயே பாஜவுக்கு மக்கள் பாடம் கற்பித்து விட்டனர்.

பிரதமர் மோடியோ, ஆர்எஸ்எஸ்சோ, பாஜவோ மட்டுமே ஒட்டுமொத்த இந்து சமுதாயம் கிடையாது. அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இந்தியாவின் அடிப்படைக் கருத்துக்கள் மீது பாஜ திட்டமிட்ட தாக்குதல்களை நடத்துகிறது. பாஜ அரசின் யோசனைகளை கோடிக்கணக்கான மக்கள் எதிர்த்துள்ளனர். சிறுபான்மையினர் அனைத்து துறைகளிலும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆனால், சிறுபான்மையினரை பாஜ அச்சுறுத்துகிறது. சீக்கியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெறுப்பு, வன்முறையை பரப்புகிறது. தேச பக்தர்கள் என கூறிக் கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்.

பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் தனிப்பட்ட முறையில் நான் தாக்கப்பட்டுள்ளேன். எனக்கு எதிராக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனது வீட்டை எடுத்துக் கொண்டனர். அமலாக்கத்துறையால் 55 மணி நேரம் விசாரிக்கப்பட்டேன். இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சியில் ஈடுபடுவதை பெருமையாக கருதுகிறேன். எனக்குப் பிறகு இப்போது பாஜவினரும் ‘ஜெய் சம்விதான்’ (வாழ்க அரசியலமைப்பு) என திரும்பத் திரும்ப சொல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு என்பது தொழில்முறை தேர்வு அல்ல. அது பணக்காரர்களுக்காக உருவாக்கப்பட்ட வியாபாரத் தேர்வு. கடந்த 7 ஆண்டுகளில் 70 இடங்களில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை இல்லாத பாஜ அரசு இதைபற்றி அவையில் விவாதிக்க அனுமதிக்கவில்லை. ஒரு சிறந்த மாணவரால் நீட் தேர்வில் முதலிடம் பெற முடியும், ஆனால் அவரிடம் பணம் இல்லையென்றால் மருத்துவக் கல்லூரிக்கு செல்ல முடியாது. இது முழுமையாக பணக்கார மாணவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு வீரர்களை நியமிக்கும் அக்னிபாதை திட்டம் ராணுவம் கொண்டு வந்ததல்ல. அது மோடியின் திட்டம். மோடி அரசு அக்னிவீரர்களை பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறியும் தொழிலாளர்களாக கருதுகிறது.

அவர்களுக்கு தியாகி அந்தஸ்தைக் கூட வழங்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீரர்கள், ஆயுதப்படையினர் மற்றும் தேசபக்தர்களுக்கு எதிரான அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்வோம். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்க மோடி அரசு விரும்பவில்லை. விவசாயிகளை தீவிரவாதிகளாக இந்த அரசு கருதுகிறது. எழுதிவைத்துக் கொள்ளுங்கள், குஜராத்தில் காங்கிரஸ் விரைவில் உங்களை வீழ்த்தும். அனைத்து கட்சிகளையும் சமமாக அன்புடனும் பாசத்துடனும் பிரதிநிதித்துவப்படுத்துவதே எதிர்க்கட்சித் தலைவராக எனது பணி. எதிர்க்கட்சிகளை உங்கள் (பாஜ) எதிரிகளாக நினைக்காதீர்கள். இந்த அவையில் எந்த விவகாரத்தையும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நாம் ஒன்றிணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம். 240 இடங்களில் வெற்றி பெற்றதற்காக உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் ராகுல் காந்தி பேசிய போது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அவையில் அனல் பறந்தது. கடந்த 10 ஆண்டாக எந்த விவாதத்திலும் பங்கேற்காத பிரதமர் மோடியே எழுந்து நின்று பதிலளித்தார். இந்துக்கள் பற்றி ராகுல் பேசிய போது குறுக்கிட்ட பிரதமர் மோடி, ‘‘ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று விமர்சிப்பது தீவிரமான பிரச்னை’’ என்றார். இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென அமித்ஷா கூறினார். இதுதவிர 4 ஒன்றிய அமைச்சர்களும் ராகுலின் பேச்சுக்கிடையே பலமுறை பதற்றத்துடன் குறுக்கிட்டு பதிலளித்தனர். இதனால் அவையில் அனல் பறந்தது.
மேலும் அவை முடிந்த பிறகு ராகுல் இந்துக்களை அவமதித்து விட்டதாக கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனது சகோதரர் இந்துக்களை அவமதிக்கவில்லை எனவும், பாஜ மற்றும் அதன் தலைவர்கள் பற்றி மட்டுமே பேசியதாகவும் பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

* மணிப்பூர் என்கிற மாநிலமே இல்லையா?
விவாதத்தில் மணிப்பூர் குறித்து பேசிய ராகுல், ‘‘மணிப்பூரில் எதுவும் நடக்காதது போல் ஒன்றிய பாஜ அரசு செயல்படுகிறது. மணிப்பூரில் உள்நாட்டு போரை தூண்டிவிட்டுள்ளீர்கள். உங்களாலும், உங்கள் கொள்கைகளாலும், உங்கள் அரசியலாலும் மணிப்பூர் எரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி இந்தியாவில் மணிப்பூர் என்கிற ஒரு மாநிலமே இல்லை என்பது போல் இருக்கிறார். அவர் மணிப்பூருக்கு செல்ல வேண்டுமென நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் மோடியிடமிருந்து எந்த பதிலும் இல்லை’’ என்றார்.

* மக்களவையில் இன்று மோடி பதில்
மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு பேச உள்ளார். இதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் பேச்சுக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* டிவியில் புறக்கணிப்பை அம்பலப்படுத்திய ராகுல்
நாடாளுமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பும் சன்சாத் டிவியில் எதிர்க்கட்சி தலைவர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதை ராகுல் காந்தி நேற்று அம்பலப்படுத்தினார். கடவுள் சிவன் பெயரை கூறி புகைப்படத்தை காட்டியதும் கேமரா சபாநாயகர் பக்கம் திருப்பப்பட்டது. இதை அவை உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டிய ராகுல் மீண்டும் சிவன் படத்தை மேலே தூக்கினார். அப்போதும் திரையில் ராகுல் காட்டப்படாமல் ஓம்பிர்லா காட்டப்பட்டார்.

ராகுல் பேச்சில் 50 முறை குறுக்கிட்ட அமைச்சர்கள்
மக்களவையில் நேற்று ராகுல்காந்தி பேசும் போது மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ எம்பிக்கள் 50 முறை குறுக்கிட்டனர். 100 நிமிடம் ராகுல் பேசினார். இதில் 50 முறை குறுக்கீடு நடந்தது. மேலும் பலமுறை பா.ஜ எம்பிக்கள் கோஷம் எழுப்பி ராகுலை பேச விடாமல் செய்தனர். பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் குறுக்கீடு விவரம் வருமாறு:
1. நரேந்திர மோடி – 2
2. அமித் ஷா – 4
3. ராஜ்நாத் சிங் – 3
4. கிரண் ரிஜிஜு – 6
5. சிவராஜ் சிங் சவுகான் – 3
6.அனுராக் தாக்கூர் – 6
7. அஸ்வினி வைஷ்ணவ் – 4
8.நிஷிகாந்த் துபே – 10+
9. பூபேந்திர யாதவ் – 5

* இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து
டி20 உலகக் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நேற்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘இந்திய அணியின் வெற்றியில் இருந்து நாட்டின் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உத்வேகம் பெறுவார்கள்’’ என வாழ்த்து தெரிவித்தார். மாநிலங்களவையில் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர், ‘‘இத்தகைய வரலாற்று சாதனைகள் ஒவ்வொரு குடிமகனுக்கும் பெரிய கனவு காணவும், கடினமாக உழைக்கவும், உயர்ந்த நிலையை அடையவும் தூண்டுகின்றன’’ என்றார்.

* மோடியிடம் சபாநாயகர் தலைவணங்கியது ஏன்?
மக்களவையில் பிரதமர் மோடியை மட்டுமின்றி சபாநாயகரையும் ராகுல் காந்தி நேற்று விட்டு வைக்கவில்லை. விவாதத்தில் பேசிய ராகுல், ‘‘நீங்கள்தான் மக்களவையின் இறுதி நடுவர். ஆனால் உங்கள் நாற்காலியில் 2 பேர் அமர்ந்துள்ளனர், ஒன்று மக்களவை சபாநாயகர், இன்னொன்று ஓம்பிர்லா. சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் செல்ல நாங்கள் வந்த போது, என்னிடம் நீங்கள் நிமிர்ந்து நின்றபடி கை குலுக்கினீர்கள். அதுவே பிரதமர் மோடியிடம் குனிந்து கைகுலுக்கினீர்கள். ஏன் இந்த பாரபட்சம்?’’ என்றார். அப்போது அமித்ஷா தலையிட்டு, ‘‘இது சபாநாயகருக்கு எதிரான குற்றச்சாட்டு’’ என்றார்.

பிறகு பதிலளித்து பேசிய சபாநாயகர் ஓம்பிர்லா, ‘‘பிரதமர் சபை தலைவர், தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், சபாநாயகராகவும் எனது கலாச்சாரம், பாரம்பரியங்கள், பெரியவர்களுக்கு தலைவணங்க வேண்டும், சமமானவர்களை சமமாக நடத்த வேண்டும் என்கிற மரபை கற்பிக்கின்றன. அதன்படி நடக்கறேன். பெரியவர்களை வணங்குவதும், தேவைப்பட்டால் அவர்களின் கால் பணிந்து வணங்குவதும் என் கலாச்சாரம்’’ என்றார்.
இதற்கு ராகுல், ‘‘இந்த அவையில் சபாநாயகரை விட யாரும் பெரியவர் இல்லை. அனைவரும் அவருக்குதான் தலைவணங்க வேண்டும். எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் சபாநாயகருக்கு அடிபணிகிறோம். நீங்கள் சொல்வதை கேட்கிறோம். அதே சமயம் அவையை நியாயமாக நடத்த வேண்டியதும் முக்கியம்’’ என்றார்.

The post அடுக்கடுக்காக பிரச்னைகளை எழுப்பி மக்களவையில் பாஜவை திணறடித்த ராகுல்: 100 நிமிட பேச்சால் அவையில் அனல் பறந்தது appeared first on Dinakaran.

Tags : RAHUL ,ANAL ,Modi ,Amitsha ,New Delhi ,
× RELATED வயநாடு மக்கள் என்மனதில் தனி இடம்பிடித்தனர் : ராகுல் காந்தி