அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் நெற்குன்றம் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையை தடுக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையில் தனிப்படை போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று கோயம்பேடு பகுதியில் ஒரு கும்பல் போதை மாத்திரைகள் சப்ளை செய்வதாகவும் போதை ஊசி போடுவதாகவும் கிடைத்த தகவல்படி, இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையில் போலீசார் கண்காணித்தபோது ஆழ்வார்திருநகர் பகுதியில் 6 பேர் போதை மாத்திரைகளை சப்ளை செய்தனர். அவர்களை போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில், ஆழ்வார்திருநகரை சேர்ந்த ஹரிஷ்(25), விஜயகுமார் (எ) கிளிஞ்சவாய் விஜி(22), அஜய் (எ) வெள்ளை அஜய்(22), கோகுல்(22), மாணிக்கம்(23) மற்றும் சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்தனர்.
மாணிக்கம் மற்றும் சிறுவன் ஆகியோர் கூறியதாவது; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வது கடினமாக உள்ளது. அப்படியிருந்தும் போலீசாருக்கு தெரியாமல் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்தோம். பின்னர் போதை மாத்திரைகள் விற்பனை செய்தோம். மும்பைக்கு சென்று ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளை வாங்கிவந்து கோயம்பேடு மார்க்கெட், நெற்குன்றம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் 10 மாத்திரைகள் 5 ஆயிரம் என்று விற்பனை செய்தோம். இதில் நல்ல லாபம் கிடைத்தது.இவ்வாறு தெரிவித்தனர். இதையடுத்து இவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 3,000 போதை மாத்திரைகள் மற்றும் 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 பேரை புழல் சிறையிலும் சிறுவனை சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியிலும் சேர்த்தனர்.
The post மும்பையில் இருந்து மொத்தமாக வாங்கிவந்து; சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6பேர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.