புதுடெல்லி: சூரிய குடும்பம் கோள்கள் மட்டுமின்றி சிறுகோள்களும் சுற்றி வருகின்றன. இவை சூரிய குடும்பம் உருவான போது சிதறடிக்கப்பட்ட வான்பொருட்களால் ஆன பாறைகள். சுமார் 460 கோடி ஆண்டுக்கு முன்பிருந்தே சிறுகோள்கள் பிரபஞ்சத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவை வெவ்வேறு அளவுகள் கொண்டவை. சுமார் 6 கோடி ஆண்டுகள் முன்பு பூமியின் மீது மோதிய சிறுகோள் தான் டைனோசர்களின் அழிவுக்கு வழிவகுத்ததாக நம்பப்படுகிறது.
மேலும், கடந்த 1908ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி ரஷ்யாவின் மத்திய சைபீரியாவின் ‘துங்கஸ்கா’ ஆற்றுக்கு அருகே ஒரு வான்பொருள் விழுந்து வெடித்தது. இதன் சத்தம் பல நூறு கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டது. 10 லட்சம் டன் எடையும் ஒரு கால்பந்து மைதான அளவும் கொண்டதாக இருந்தது. இந்தச் சிறுகோள் மோதல் ‘துங்கஸ்கா நிகழ்வு’ என்று பெaயரிடப்பட்டது. அந்த நாளை நினைவுகூரும் வகையில் 2015ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் ‘சர்வதேச சிறுகோள் தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டில் சர்வதேச சிறுகோள் தினமான நேற்று பூமிக்கு அருகாமையில் சிறுகோள் ஒன்று பறந்து சென்றதாக இத்தாலி வானியியற்பியல் ஆய்வாளர் ஜியான்லுகா மாசி தெரிவித்துள்ளார். இந்த சிறுகோளுக்கு 2024 எம்கே என பெயரிடப்பட்டுள்ளது. இது சுமார் 200 மீட்ட விட்டம் கொண்டது. இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணி அளவில் பூமியிலிருந்து 3 லட்சம் கிமீ தொலைவில் இருந்து நம்மை கடந்து சென்றுள்ளது.
இந்த சிறுகோள் பூமியை கடக்கும் சமயத்தில் வானில் மிக பிரகாசமாக தோன்றியதாக மாசி தெரிவித்துள்ளார். இதே போல 2024 யுஎல் 21 என்கிற சிறுகோள் நேற்று முன்தினம் பூமியிலிருந்து 66 லட்சம் கிமீ தொலைவில் இருந்து கடந்து சென்றுள்ளது. இந்த சிறுகோள் 1900ம் ஆண்டிலிருந்து பூமியிலிருந்து 75 லட்சம் கிமீக்குள் வந்த 10 பெரிய சிறுகோள்களில் ஒன்றாகும் என்று மாசி கூறினார். இவ்விரு சிறுகோள்களாலும் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post சர்வதேச சிறுகோள்கள் தினத்தில் பூமிக்கு நெருக்கமாக பறந்த 2 சிறுகோள்கள் appeared first on Dinakaran.