×
Saravana Stores

8வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜிஎஸ்டி ஆண்டு வர்த்தக வரம்பு உயருமா? குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

மும்பை: 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி, இன்று 8வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரி ஒன்றிய 2017ம் தேதி நாடு முழுவதும் அமலுக்கு வந்து, இன்றுடன் 8வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மாநில வரிகள் பலவற்றை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டியாக அமல்படுத்தியால், மாநிலங்கள் வருவாய் இழந்தன. இதனை ஈடுகட்ட 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவதாக, ஒன்றிய பாஜ அரசு உறுதி அளித்தது.

5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், மாநிலங்கள் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என போர்க்கொடி தூக்கின. நீண்ட போராட்டத்துக்கு பிறகு சில மாநிலங்களுக்கு தாமதமாக இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இழப்பீட்டை 5 ஆண்டுகளுக்குமேல் வழங்க ஒன்றிய பாஜ அரசு மறுத்து விட்டதாலும், ஆண்டுக்கு ஆண்டு ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துக் கொண்டே வருவதாலும் ஒன்றிய அரசுக்கு வருவாய் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குவிந்து வருகிறது.

உதாரணமாக கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி இதுவரை இல்லாத அதிபட்ச அளவாக ரூ.2.1 லட்சம் கோடியை எட்டியது. 2023-24 நிதியாண்டின் 4வது காலாண்டில் ஜிஎஸ்டி வருவாய் ஜிடிபியில் 6.62 சதவீதமாக இருந்தது. ஜிஎஸ்டியால் பொருட்கள் விலை உயர்வு,சேவைகள் கட்டணங்கள் அதிகரிப்பு போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுதவிர, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) துறையில் ஜிஎஸ்டியால் ஏற்பட்ட பாதிப்புகளும் அதிகம்.

எனவே, வரி பாதிப்பில் இருந்து விடுபட ஆண்டு வர்த்தக இலக்கை உயர்த்த வேண்டும் என எம்எஸ்எம்இக்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதாவது இந்த நிறுவனங்களின் வர்த்தகம் ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கு மேல் இருந்தால் அவை ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இந்த வரம்பை ரூ.1.5 கோடியாக அதிகரிக்க வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். உலக வர்த்தக ஆய்வு அமைப்பு ஒன்றிய அரசுக்கு முன்வைத்துள்ள பரிந்துரையிலும் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஆண்டு வர்த்தக வரம்பை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.1.5 கோடியாக அதிகரிக்க வேண்டும், மாநிலத்துக்குள் பொருட்களை சப்ளை செய்வோருக்கு ஜிஎஸ்டி விதிகளை எளிமையாக்க வேண்டும். வர்த்தக வரம்பை உயர்த்துவதன் மூலம் எம்எஸ்எம்இ துறையினர் பலன் அடைவார்கள். அதிக வேலை வாய்ப்பை இந்த துறை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும். ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வர்த்தக உச்சவரம்பு என்பது, மாதத்துக்கு சராசரியாக ரூ.12 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களாகும்.

இதில் லாபம் என்பது ஏறக்குறைய 10 சதவீதம் தான் இருக்கும். அதாவது இந்த நிறுவனங்கள் ரூ.1.2 லட்சம் லாபம் சம்பாதிக்க வழி வகுக்கும். இந்த நடைமுறையால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 1.4 கோடியில் இருந்து 23 லட்சத்துக்கும் கீழே குறைந்து விடும். , வரி ஏய்ப்புகளை தடுக்கவும் வகை செய்யும். இதனால் அரசுக்கு வரி வசூல் அதிகரிக்கும்.

இதன் மூலம் தற்போதைய 7 சதவீத வரி வசூல் இழப்பு தடுக்கப்பட்டு விடும். இதுதவிர, அத்தியாவசிய உணவுகள், சுகாதார சேவைகள் ஆகியவற்றுக்கான வரிகளை குறைத்து அவை அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைக்க அரசு வழி வகுக்க வேண்டும் என இந்த அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. 8வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையிலாவது மேற்கண்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என தொழில்துறையினர், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

* மாநில வரிப்பகிர்வு
ஜிஎஸ்டி வருவாயில் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பங்களிப்பு தர வேண்டும். மாநிலத்தில் விற்கப்படும் பொருட்களுக்கான ஜிஎஸ்டியில் தங்கள் பங்கைப் பெற மாநிலங்களுக்கு உரிமை உண்டு. மாநிலத்துக்கு வெளியே விற்பனையாகும்போது ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக வசூலிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு நேரடி வருவாயாக வந்த வரிகள் ஜிஎஸ்டியில் காணாமல் போய் விட்டன. வரி விதிக்கும் உரிமையையும் மாநிலங்கள் இழந்து விட்டன.

உதாரணமாக, நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டும் மும்பை மாநகராட்சிக்கு ஆக்ட்ராய் வரியும், மாநிலங்களுக்கு ஆடம்பர வரி, மாநில மதிப்புக் கூட்டு வரி போன்றவை மூலம் வந்த வருவாயும் நின்று விட்டன. 5 ஆண்டுகளுக்கான மாநிலங்களுக்கான இழப்பீடும் 2022 ஜூன் மாதத்துடன் முடிவடைந்து விட்டது.

இதனால் மாநிலங்கள் வருவாய் ஆதாரம் இழந்து நிதிக்காக ஒன்றிய அரசிடம் கையேந்தும் நிலை வந்து விட்டது. தற்போது மொத்த ஜிஎஸ்டியில் சுமார் 41 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு ஒன்றிய அரசால் பகிர்ந்தளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கூட்டாட்சித் தத்துவத்தை புறக்கணிக்காமல் மாநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் ஜிஎஸ்டி பிரச்னைக்கு இனியாவது தீர்வு வர வேண்டும் என மாநில அரசுகளும் எதிர்பார்க்கின்றன.

* வடமாநிலங்கள் கொள்ளை லாபம்
தென் மாநிலங்கள் பல பாதிக்கப்பட்ட நிலையில் வடமாநிலங்களின் வருவாய் ஜிஎஸ்டியால் உயர்ந்து விட்டது. உதாரணமாக பீகாரில் வரி வருவாய் ஜிபிடியில் 3.3 சதவீதமாக இருந்தது 4.7 சதவீதமாகவும், உத்தரபிரதேசத்தில் 2.9 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதம், ஜார்க்கண்டில் 3.1 சதவீதத்தில் இருந்து 3.9 சதவீதமாக உயர்ந்து விட்டது.

* தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு எவ்வளவு?
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல மாநிலங்கள் ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டன. உதாரணமாக தமிழ்நாட்டின் வரி வருவாய் ஜிஎஸ்டிக்கு முன்பு 2.5 சதவீதமாக இருந்தது, 2.3 சதவீதமாக குறைந்து விட்டது. இதுபோல் கர்நாடகாவில் 3.4 சதவீதத்தில் இருந்து 2.8 சதவீதம், ஆந்திராவில் 3.2 சதவீதத்தில் இருந்து 2.3 சதவீதம் என குறைந்து விட்டது.

The post 8வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜிஎஸ்டி ஆண்டு வர்த்தக வரம்பு உயருமா? குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,GST ,Dinakaran ,
× RELATED தாம்பரம், குரோம்பேட்டை ஜிஎஸ்டி...