காந்தி நகர்: மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள விமானநிலையத்தின் மேற்கூரை ஜூன் 27ம் தேதி இடிந்து விழுந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல்-1ன் மேற்கூரை இடிந்து விழுந்திருந்தது. இதில் ஒருவர் பலியானார். இந்தநிலையில் நேற்று குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. ராஜ்கோட் பகுதியில் நேற்றுமுன்தினம் தொடங்கி நேற்று அதிகாலை வரை கனமழை பெய்தது.
இதன் காரணமாக ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. பயணிகளை கால் டாக்சிகள் இறக்கி, ஏற்றும் இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை யாரும் காயமடையவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து பாஜ மீதும், பிரதமர் மோடி மீதும் காங்கிரஸ் கட்சி சரமாரியான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது. நேற்று விபத்து நடந்த டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 பகுதியை மோடிதான் திறந்து வைத்தார் என்றும், அதேபோல ராஜ்கோட் விமான நிலையத்தையும் மோடிதான் திறந்து வைத்திருக்கிறார் என காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விமர்சித்துள்ளது.
The post மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது appeared first on Dinakaran.