×
Saravana Stores

சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமம் ரத்து: ஒருவர் கைது

விருதுநகர்: சாத்தூரில் 4 பேர் உயிரிழப்புக்கு காரணமான பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பந்துவார்பட்டியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர். பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சகாதேவனின் மகன் குருசாமி கைது செய்யப்பட்டார்.

சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்; 3 அறைகள் தரைமட்டமாயின. இது குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தை சேர்ந்தவர் சகாதேவன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை, சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் உள்ளது.

டி.ஆர்.ஓ உரிமம் பெற்ற இந்த ஆலையில், சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 15க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன; அச்சங்குளம், நடுச்சூரங்குடி, பந்துவார்பட்டியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல பட்டாசு தயாரிக்க மருந்துகள் கலக்கும் பணியில், அச்சங்குளம் மற்றும் நடுச்சூரங்குடியைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் அருகருகே இருந்த 3க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாயின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 தொழிலாளர்களும் பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்து வந்து சாத்தூர் மற்றும் ஏழாயிரம் பண்ணை தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்கள் அச்சங்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் (41), நடுச்சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி (38), கருப்பு ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒருவரின் உடல் அடையாளம் காணப்படவில்லை. இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சாத்தூர் நகர் போலீசார், தாசில்தார் லோகநாதன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். சம்பவ இடத்தில் டிஎஸ்பி சுரேஷ்குமார் விசாரணை நடத்தினார். வெடி விபத்து ஏற்பட்டவுடன் அக்கம்பக்கத்து கிராம மக்கள் பட்டாசு ஆலையில் குவிந்தனர். வெடி விபத்து சத்தம் பந்துவார்பட்டியை சுற்றி 3 கீ.மீ தூரத்துக்கு கேட்டதாக தெரிவித்துள்ளனர். மீட்பு பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமம் ரத்து: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Chathur ,District Revenue Officer ,Rajendran ,Sakadevan ,Bandhuarpatti ,Chhatur ,Dinakaran ,
× RELATED சாத்தூர் பகுதியில் பாலங்களில் வண்ணம் பூசும் பணி தீவிரம்