- பாஜா பிரமுகர்
- சிறப்பு எஸ்.ஐ.
- தலைமை கான்வே
- போலீஸ் நடவடிக்கை
- சென்னை
- கான்வே
- ஸ்டெல்லா மரிஸ் கல்லூரி
- ஸ்டெல்லா மேரி கல்லூரி
சென்னை: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி அருகே, முதல்வர் கான்வாய் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் சிறப்பு எஸ்ஐயை தாக்கிய பாஜ பிரமுகர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர் வந்து செல்கின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் முதல்வர் கான்வாய் பணிக்காக கல்லூரி அருகே, மாம்பலம் காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ மகாலட்சுமி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது கல்லூரியில் புதிதாக சேர வரும் மாணவிகளிடம் மாத கட்டணத்தில் வேன் சவாரி ஏற்றுவதற்கான துண்டு பிரசுரங்களை தணிகையரசு என்பவர் கல்லூரி நுழைவாயில் அருகே வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே கல்லூரியில் மாணவிகளை சவாரி ஏற்றும் வேன் உரிமையாளரான பாஜ பிரமுகர் ராஜேந்திரன், இந்த கல்லூரியில் நாங்கள் தான் சவாரி செய்து வருகிறோம். யாரும் சவாரிக்கான துண்டு பிரசுரங்களை வழங்க கூடாது என்று தணிகையரசுவிடம் தகராறு செய்துள்ளார்.
பாஜ பிரமுகர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக அதே கல்லூரியில் சவாரி ஏற்றி வரும் மற்ற 5 வேன் உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து தணிகையரசுவை தாக்கியுள்ளனர். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ மகாலட்சுமி, முதல்வர் வரும் நேரம் என்பதால் தகராறில் ஈடுபட்ட நபர்களை தடுக்க முயன்றார். அப்போது பாஜ பிரமுகர் ராஜேந்திரன் பெண் என்றும் பாராமல் சிறப்பு எஸ்ஐயை தள்ளி விட்டுள்ளார். இதில் அவர் கீழே விழுந்துள்ளார்.
இதுகுறித்து சிறப்பு எஸ்ஐ மகாலட்சுமி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறப்பு எஸ்ஐயை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்கியது தெரியவந்தது. உடனே போலீசார் பாஜ பிரமுகரான ராஜேந்திரன், சக வேன் உரிமையாளர்களான விஜய் ஆனந்த், கோபிநாதன், ராஜேஷ்குமார், கோபி ஆகிய 5 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.
The post முதல்வர் கான்வாய் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் சிறப்பு எஸ்ஐ மீது தாக்குதல் பாஜ பிரமுகர் உள்பட 5 பேர் கைது: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.