செய்யாறு, ஜூன் 28: செய்யாறு அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற லோடு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக பலியானார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த எசையனூர் மல்லிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்(35), லோடு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பில்லாதாங்கல்- கீழ்நெல்லி சாலையில், பாலாற்று படுகையில் இருந்து அனுமதி இன்றி மணலை லோடு ஆட்டோவில் ஏற்றிக்சென்று கொண்டிருந்தார். அவருடன் மணலை தள்ளுவதற்காக வளவனூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளிகள் வினோத்குமார்(36), சாரதி(18) ஆகியோரும் சென்றனர்.
பில்லாந்தாங்கல் கூட்ரோடு அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக சென்று சாலையோர பள்ளத்தில் 3 முறை புரண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அருள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும், அவருடன் சென்ற வினோத்குமார், சாரதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அருளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அருளின் அண்ணன் பழனி என்பவர் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post லோடு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர் பலி 2 பேர் படுகாயம் செய்யாறு அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற appeared first on Dinakaran.