புதுச்சேரி : கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் புதுவை காவலர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (38). இவர் புதுச்சேரி காவல்துறையில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் தனது நண்பர் சாமுவேல் (35) மற்றும் தனது உறவுக்கார பெண் உள்பட 4 பேருடன் சொந்தவேலை காரணமாக காரில் சென்னைக்கு சென்றுவிட்டு நேற்று மாலை இசிஆர் சாலை வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். காரை செல்வம் ஓட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம் வெண்ணாங்கப்பட்டு பகுதியை கடக்கும் போது, கிழக்கு கடற்கரை சாலையில் 4 வழிப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதை கவனிக்காமல் வேகமாக வந்தபோது மாற்று பாதையில் காரை திருப்ப முடியாமல் தடுப்பு மணல் மூட்டைகள் மீது மோதி அருகே இருந்த பள்ளத்திற்குள் பாய்ந்தது.
அப்போது காரை ஓட்டிச்சென்ற காவலர் செல்வம் மற்றும் உடன் அமர்ந்து சென்ற சாமுவேல் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டபோது செல்வம் சம்பவ இடத்திலே உயிரிழந்தது தெரியவந்தது. பிறகு சாமுவேல் உட்பட 3 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுசம்பந்தமாக சூனாம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாமுவேல் தீவிர சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூனாம்பேடு போலீசார் வழக்கு பதிந்து விபத்துக் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னைக்கு சென்று திரும்பியபோது சோகம் கார் விபத்தில் புதுவை காவலர் உட்பட 2 பேர் பலி appeared first on Dinakaran.