- ஆப்கானிஸ்தான்
- வங்காளம்
- ஆஸ்திரேலியா
- கிங்ஸ்டவுன்
- ஐசிசி டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்று
- இந்தியா
- தின மலர்
கிங்ஸ்டவுன்: ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர்-8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்கதேச அணியை போராடி வென்ற ஆப்கானிஸ்தான், முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்தது. பிரிவு-1ல் இருந்து இந்தியா ஏற்கனவே அரையிறுதியை உறுதி செய்த நிலையில், அடுத்த அணி எது என்பதை முடிவு செய்யும் பரபரப்பான போட்டி நேற்று காலை நடந்தது. அதில் ஆப்கானிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கான் கேப்டன் ரஷித் கான் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். வங்கதேசம் தொடர்ச்சியாக 2 தோல்விகளை சந்தித்திருந்தாலும், இந்தியாவிடம் ஆஸி. மண்ணைக் கவ்வியதால் நூலிழை வாய்ப்புடன் களமிறங்கியது. குர்பாஸ் – இப்ராகிம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடி 10.4 ஓவரில் 59 ரன் சேர்த்தது. இப்ராகிம் 18, அஸ்மதுல்லா 10 ரன்னில் வெளியேறினர்.
குர்பாஸ் 43 ரன் (55 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்க, அடுத்து வந்த குல்பாதின் 4, முகமது நபி 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி கட்டத்தில் கேப்டன் ரஷித் கான் 3 சிக்சர்களைப் பறக்கவிட, ஆப்கான் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்தது. கரிம் ஜனத் 7, ரஷித் 19 ரன்னுடன் (10 பந்து, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் ரிஷத உசைன் 3 விக்கெட் அள்ளினார். தஸ்கின் அகமது ஒரு மெய்டன் உட்பட 4 ஓவரில் 12 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட், முஸ்டாபிசுர் 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து 20 ஓவரில் 116 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. ஒரு முனையில் லிட்டன் தாஸ் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த சக வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது வங்கதேசத்துக்கு பின்னடைவை கொடுத்தது. 12.1 ஓவரில் இலக்கை எட்டினால் ஆப்கான், ஆஸி. அணிகளை பின்னுக்குத் தள்ளி அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற அருமையான வாய்ப்பை வங்கதேச வீரர்கள் வீணடித்தனர். இடையில் மழை குறுக்கீடு காரணமாக 19 ஓவரில் 114 ரன் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
கடுமையாகப் போராடிய லிட்டன் தாஸ் அரை சதம் அடித்தாலும், நவீன் வேகம் மற்றும் ரஷித் சுழலை சமாளிக்க முடியாத வங்கதேசம் 17.5 ஓவரில் 105 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தாஸ் 54 ரன்னுடன் (49 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கான் பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 3.5 ஓவரில் 26 ரன்னுக்கு 4 விக்கெட், ரஷித் கான் 4 ஓவரில் 23 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். பஸல்லாக், குல்பாதின் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். டிஎல்எஸ் விதிப்படி 8 ரன்னில் போராடி வென்ற ஆப்கான் உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது. ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் ஏமாற்றத்துடன் வெளியேறின. நவீன் உல் ஹக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா-ஆப்கானிஸ்தான் அணிகளும், 2வது அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன. இறுதிப் போட்டி ஜூன் 29ம் தேதி நடக்கும்.
முதல் வெற்றி…
* ஆப்கான் முதல் முறையாக உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது மட்டுமல்ல… வங்கதேச அணிக்கு எதிராக உலக கோப்பையில் வெல்வதும் இதுவே முதல் முறையாகும். வங்கதேசத்துடன் ஏற்கனவே 2014 உலக கோப்பை டி20ல் ஒரு முறை, ஒருநாள் உலக கோப்பையில் 3 முறை (2015, 2019, 2023) மோதிய ஆப்கான் அனைத்திலும் தோல்வியையே தழுவியிருந்தது.
* டி20 போட்டிகளில் அதிக முறை 4 விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் ரஷித் கான் முதலிடம் பிடித்துள்ளார். வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் (8 முறை), உகாண்டா வீரர் ஹென்றி ஸ்செயான்டோ (7முறை) அடுத்த இடங்களில் உள்ளனர்.
* ஒரு உலக கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆப்கான் வீரர் ஃபரூக்கி (16 விக்கெட்) இலங்கையின் வனிந்து ஹசரங்கா உடன் (2022) முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அடுத்து அரையிறுதியில் விளையாட வேண்டி உள்ளதால் அவர் தனித்தே முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்தியாவின் அர்ஷ்தீப் (15) 2வது இடத்தில் இருக்கிறார்.
* டி20 போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் முகமது நபி (69) 2வது இடத்தை பிடித்தார். டேவிட் மில்லர் (79) முதலிடம் வகிக்கிறார்.
* டி20 உலக கோப்பையில் ஆஸி. தொடர்ந்து 2வது முறையாகவும், மொத்தத்தில் 3வது முறையாகவும், வங்கதேசம் தொடர்ந்து 5வது முறையாகவும், மொத்ததில் 6வது முறையாகவும் 2வது சுற்றுடன் வெளியேறி உள்ளன.
* பாகிஸ்தான்(2010), வெஸ்ட் இண்டீஸ் (2014) அணிகளை தொடர்ந்து நடப்பு சாம்பியனாக அரையிறுதிக்கு முன்னேறும் 3வது அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது. அதே சமயம், எந்த நடப்பு சாம்பியனும் அரையிறுதியை இதுவரை தாண்டியதில்லை.
The post 8 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்: ஆஸ்திரேலியா வெளியேற்றம் appeared first on Dinakaran.