- சமாஜ்வாடி
- சிறுவபுரி முருகன் கோயில்
- Periyapalayam
- கலெக்டர்
- பிரபு சங்கர்
- ஸ்ரீநிவாச பெருமாள்
- சிறுவாபுரி
- முருகன்
- கோவில்
- பெரியபாளையம், திருவள்ளூர் மாவட்டம்
பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் பிரபு சங்கர் மற்றும் எஸ்பி சீனிவாச பெருமாள் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வதும் வழக்கம். அதன்படி செவ்வாய்க்கிழமையான நேற்று சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பொது தரிசனம், கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் 2மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே கலெக்டர் பிரபுசங்கர், எஸ்பி சீனிவாச பெருமாள் ஆகியோர் சிறுவாபுரி முருகன் கோயிலில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், வாகன நிறுத்துமிடம் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர். குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதன் தொடர்பாகவும், அதற்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தனர். பின்னர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ள பக்தர்களிடமும் குறைகளை கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், இந்து சமய உதவி ஆணையர் வேலூர் கருணாநிதி, இந்து சமய அறநிலை துறை தலைமை எழுத்தர் திருவேணி, இந்து சமய ஆய்வாளர் கலைவாணன், ஆலய செயல் அலுவலர் கார்த்திகேயன், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளர் பாலச்சந்திரன், டி.எஸ்.பிக்கள் கணேஷ்குமார், சுரேஷ் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தினி, பார்த்தசாரதி, மண்டல துணை வட்டாட்சியர் பிரகாஷ், காவல்துறை ஆய்வாளர்கள் வெங்கடேசன், வடிவேலு முருகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
கடைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை
ஆய்வின்போது கலெக்டர் பிரபு சங்கர் நிருபர்களிடம் கூறுகையில், வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி தருதல், போக்குவரத்து, வரிசையில் எளிமையாக செல்வது, பக்தர்கள் தங்குமிடம், ஓய்வறை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதுதொடர்பாக திட்டம் தயாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோயிலின் எதிரே அமைந்துள்ள கடைகளை நெறிமுறைப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
The post சிறுவாபுரி முருகன் கோயிலில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர், எஸ்பி திடீர் ஆய்வு: பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர் appeared first on Dinakaran.