திருமலை: தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 10 ஆண்டுகள் ஆட்சிசெய்த சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை இழந்தது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 65 இடங்களும், பிஆர்எஸ் 39 இடங்களும் மற்ற தொகுதிகளில் பாஜக மற்றும் எம்ஐஎம் கட்சிகளும் வெற்றிபெற்றன. காங்கிரஸ் முதல்வராக ரேவந்த்ரெட்டி பொறுப்பேற்றார். பெரும்பான்மைக்கு 59 இடங்கள் இருந்தால்போதும் என்ற நிலையிலும் சில காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைபேசி மீண்டும் ஆட்சிக்கு வர சந்திரசேகரராவ் திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பிஆர்கட்சி எம்எல்ஏக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் கடந்த சில மாதங்களில் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் காங்கிரசுக்கு தாவினர். இதன்தொடர்ச்சியாக ஜகித்யாலா பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ சஞ்சய் குமார், முதல்வர் ரேவந்த்ரெட்டியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார். அவரை சால்வை அணிவித்து முதல்வர் ரேவந்த்ரெட்டி கட்சியில் இணைத்துக்கொண்டார். இதன்மூலம் தெலங்கானா சட்டப்பேரவையில் காங்கிரஸ் பலம் அதிகரித்துள்ளது. இதுதவிர பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த மேலும் 20 எம்எல்ஏக்கள், காங்கிரசில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
The post மேலும் ஒரு பிஆர்எஸ் எம்எல்ஏ காங்கிரசில் இணைந்தார்: சந்திரசேகரராவ் அதிர்ச்சி appeared first on Dinakaran.