×
Saravana Stores

25 ஆண்டாக துக்க, விசேஷ நிகழ்ச்சிக்கு தடை; காதல் திருமணம் செய்த குடும்பத்தை ஒதுக்கி வைத்த கிராமத்தினர்.! கோவையில் நடந்த கொடுமை

கோவை: கோவை அருகே அன்னூர் வடக்கலூர் பகுதியில் காதல் திருமணம் செய்த குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆர்டிஓ தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. கோவை மாவட்டம் அன்னூர் அருகே வடக்கலூர் பகுதியில் ஒரே சமூகத்தைச சேர்ந்த 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், சுந்தரம் மற்றும் அவரை சார்ந்த 15 குடும்பங்கள் கடந்த ஆண்டு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த ஒரு புகார் மனுவில் கூறியிருந்ததாவது: எங்கள் கிராமத்தில் காதல் திருமணம் செய்தால் அல்லது கலப்பு திருமணம் செய்தால் அந்த குடும்பங்களை கோவிலுக்குள் சேர்ப்பதில்லை. அவர்களுடன் மற்றவர்கள் யாரும் பேசக்கூடாது. பொருட்கள் வாங்க கூடாது. அவர்களது வீடுகளில் சடங்கு செய்யக்கூடாது என தடை செய்துள்ளனர்.

இதன், மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து அரசு தரப்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. இதில், சுந்தரம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்த, வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், கலெக்டர் மற்றும் ஆர்டிஓ பிரச்னை குறித்து விசாரித்து ஒரு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதனை, தொடர்ந்து கோவை ஆர்டிஓ கோவிந்தன் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு அன்னூர் தாலுகா அலுவலகத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இதில், சுந்தரம் மற்றும் புருஷோத்தமன் தரப்பினர் என இரு தரப்பினரையும் வருவாய் துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இதுகுறித்து, சுந்தரம் தரப்பினரான கிராம மக்களிடம் கேட்டபோது, சுந்தரம் தரப்பினர் யாரும் வடக்கலூர் பகுதியில் உள்ள கோவிலுக்குள் செல்லக்கூடாது. அதில், மற்ற 250 குடும்பங்களை சார்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தால் அவர்களும் சுந்தரம் தரப்பினருடன் சேர்க்கப்படுவார்கள். அப்படியே உங்கள் குடும்பத்தை சேர்க்க வேண்டுமானால், ஊர் பொதுமக்களை அவரவர் வீடுகளுக்கு சென்று அழைத்து, பொதுவாக கூடி அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டால் மட்டுமே நீங்கள் சேர்த்துக் கொள்ளப்படுவீர்கள் என கூறி விலக்கி வைத்துள்ளார்கள். இந்த, சம்பவம் சுமார் 25 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து எங்களை எங்களது உறவினர்களுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

உறவினர்களின் விசேஷங்களுக்கு சென்று வர தடையில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுந்தரம் தரப்பினர் ஏதாவது உறவினர்களின் துக்க காரியங்களுக்கு சென்றால், துக்க வீட்டார் அனுமதித்தால், அவர்களும் சுந்தரம் தரப்பினருடன் சேர்க்கப்படுவார்கள். எனவே எங்களது உறவினர்களும் எங்களை வெளியேற்றி விடுவார்கள். இது எங்களுக்கு மன வருத்தத்தை அளிக்கிறது என்று பல்வேறு குமுறல்களை முன் வைத்தனர். இதுகுறித்து புருஷோத்தமன் தரப்பினரிடம் கேட்டபோது அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இது குறித்து முடிவு தெரியவரும் என கூறினர். இந்நிலையில் ஆர்டிஓ தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

The post 25 ஆண்டாக துக்க, விசேஷ நிகழ்ச்சிக்கு தடை; காதல் திருமணம் செய்த குடும்பத்தை ஒதுக்கி வைத்த கிராமத்தினர்.! கோவையில் நடந்த கொடுமை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Annoor Vadakalur ,RTO ,Vadakalur ,Annoor ,Coimbatore district ,Dinakaran ,
× RELATED கோவை, திருப்பூர், ஈரோட்டிலிருந்து 3...