×
Saravana Stores

தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் சங்கரன்கோவிலில் டவுசர் கொள்ளையன் அட்டகாசம்

*சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை

சங்கரன்கோவில் : சங்கரன்கோவிலில் டவுசர் கொள்ளையர் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக சிசிடிவியில் பதிவான காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் தற்போது புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய வீடுகளுக்குள் வீட்டை உடைத்து கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். வீடுகளுக்குள் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாததால் ஒரு வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியை பதிவு செய்யும் டிவிஆரை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதேபோன்று சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள பிரபலமான ஓட்டல் ஒன்றில் சம்பவத்தன்று பின்பக்கம் வழியாக புகுந்த டவுசர் கொள்ளையன் ஓட்டல் உள்ளே சாவகாசமாக அமர்ந்து கல்லாப்பெட்டியில் உள்ள ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளான். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் சிசிடிவியில் பதிவான உருவத்தை அடிப்படையாக வைத்து கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் விருதுநகரைச் சேர்ந்த வியாபாரியின் கையை வெட்டி பணம் பறித்தது, மெயின் ரோட்டில் உள்ள நகைக்கடையில் பட்டப்பகலில் பணத்தை பறித்துக் கொண்டு ஓடியது, சங்குபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் மனைவியிடம் செயின் பறித்தது, ஓடைத்தெருவில் அதிகாலை கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்தது, திருவேங்கடம் அருகே உள்ள சங்குப்பட்டியில் 28 பவுன் மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளையடித்தது, ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள வடக்குரதவீதியில் மதியம் 1 மணியளவில் பெண்ணிடம் செயின் பறித்தது ஆகிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. நீண்ட நாட்களாகியும் இச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் இதுவரை பிடிபடவில்லை. இந்த சூழலில் மீண்டும் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

The post தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் சங்கரன்கோவிலில் டவுசர் கொள்ளையன் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Shankaran temple ,Sankarankoil ,
× RELATED சங்கரன்கோவிலில் 3 ஆயிரம் பனை விதைகள்...