×
Saravana Stores

மாவட்டங்களில் தலா 1 பள்ளியில் ரூ.15 கோடியில் ‘ரோபோட்டிக் லேப்’: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

சென்னை: பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பிறகு சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகள்:
* அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் படிப்படியாக தரம் உயர்த்தப்படும். முதற்கட்டமாக 1000 மாணவர்களுக்கு மேல் படிக்கும் அரசுப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடி மதிப்பில் உயர்த்தப்படும்.
* பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைரவிழா ஆண்டையொட்டி தேசிய அளவிலான முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு வைர விழா ஜாம்போரியில் ரூ.10 கோடியில் நடத்தப்படும்.
* 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத்திறன் பயிற்சி அளிக்கப்படும்.
* மாவட்டந்தோறும் தலா ஒரு பள்ளி என்ற அளவில் 38 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எந்திரனியல் ஆய்வகம் (ரோபோட்டிக் லேப்) ரூ.15.43 கோடியில் உருவாக்கப்படும்.
* மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் புலன் உணர்வுத் திறன் மற்றும் நுண்தசை இயக்கத்திறன் ஆகியவற்றை மேம்படுத்த ஒரு மாவட்டத்துக்கு ஒரு பல்வகைத் திறன் பூங்கா என 38 மாவட்டங்களில் ரூ.3.80 கோடியில் உருவாக்கப்படும்.
* அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புவரை படிக்கும் மாணவியருக்கு உடல், மனரீதியாக, சமூக ரீதியாகவும் இடைஞ்சல்்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஆசிரியர் குழுக்கள் அமைக்கப்படும். அவர்களுக்கு பயிற்சி அளிக்க அகல்விளக்கு திட்டம் ரூ.50 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
* 6 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான கலைத்திருவிழா போல தொடக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் கலைத் திருவிழா நடத்தப்படும்.
* உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக செல்லும் அரசு பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகை முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி ஒதுக்கப்படும்.
* தமிழ்நாட்டின் பண்பாடு, கட்டடக்கலை, சிற்பக் கலை, நாட்டுப்புறக் கலைகள், தனித்துவமான உணவு வகைகள், புவிசார் குறியீடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய புகைப்பட ஓவிய நூல்கள் ரூ.50 லட்சம் மதிப்பில் ‘மிளிரும் தமிழ்நாடு’ என்ற பெயரில் பரிசுப் பதிப்புகளாக வெளியிடப்படும்.
* பட்டயக்கணக்காளர் அடிப்படைத் தேர்வுக்கான நூல்கள் தமிழ் கலைச்சொற்களோடு கூடிய வெளியீடாக ரூ.30 லட்சம் மதிப்பில் வெளியிடப்படும்.
* இணையதள மேம்பாடு மற்றும் விற்பனை முகவர்கள் மூலமாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகப் புத்தகங்களை விற்பனை செய்ய வசதியாக விற்பனைக்கான இணையதளம் ரூ.20 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்படும்.

* திசைதோறும் திராவிடம் ரூ. 2 கோடியில் விரிவாக்கம்
நூலகத்துறை தொடர்பாக அமைச்சர் அறிவித்த முக்கிய திட்டங்கள்:
* அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு வரும் சிறுவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்த சிறார் அறிவியல் பூங்கா ரூ.80.24 லட்சம் செலவில் நிறுவப்படும்.
* செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப உதவியுடன் மொழிபெயர்ப்பு, நூல் சுருக்கம், மறு உருவாக்கம், காணொலிகள் எழுத்தாக்கம் போன்ற புதிய சேவைகள் மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் முழுநேரக் கிளை நூலகங்களில் வாசகர்கள் பயன்பெறும் வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் மூலம் ரூ. 5 லட்சம் மதிப்பில் வழங்கப்படும்.
* திசைதோறும் திராவிடம் என்ற திட்டம் ரூ. 2 கோடி மதிப்பில் பிற இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

The post மாவட்டங்களில் தலா 1 பள்ளியில் ரூ.15 கோடியில் ‘ரோபோட்டிக் லேப்’: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : ROBOTIC LAB ,MINISTER ,ANBIL MAHESH ,Chennai ,Minister of School Education ,School Education Department ,Manila ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு ஆசிரியர்கள் திறன் மிக்கவர்கள் :அமைச்சர் அன்பில் மகேஷ்