சென்னை: காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக யூ டியூபர் சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில், அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, ஜாமீன் கோரி பெலிக்ஸ் ஜெரால்ட் தாக்கல் செய்த மனுவில், நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது. சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்கமாட்டேன் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜரானார் என்றார். இதையடுத்து நீதிபதி, யார் பேட்டி கொடுத்தாலும் அதில் அவதூறு கருத்து இருந்தால் அதை எடிட் செய்து வெளியிட வேண்டும். பேட்டியின்போது மனுதாரருடைய கேள்வியில் உள்நோக்கம் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது. ஒரு தவறான, பிரச்சினை துண்டும் வகையில் மனுதாரரின் கேள்வி உள்ளது. மேலும் மனுதாரர் பாமரர் அல்ல. அவர் நன்கு படித்தவர். பொறுப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும். தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
The post யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.