புதுச்சேரி: ஜூன் 29-ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சாராயக் கடைகள் ஏலம் நடைபெற உள்ளது.
புதுச்சேரி அரசு கலால்துறை மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ 1000 கோடி வருவாய் கிடைக்கிறது. இதில் ரூ. 100 கோடி கள்ளுக்கடை, சாராயக்கடை மூலம் கிடைக்கிறது. கடந்த காலங்களில் சாராயக் கடைகள், கள்ளுக்கடைகள் அதிக அளவில் புதுச்சேரி, காரைக்காலில் இருந்தன. தற்போது சாராயத்தின் விலைக்கே மதுபானங்களும் கிடைப்பதால் கடைகள் எண்ணிக்கை குறைந்தது. தற்போது புதுச்சேரியில் 85, காரைக்காலில் 25 சாராயக் கடைகளும் உள்ளன. புதுச்சேரியில் 66 கள்ளுக்கடைகளும், காரைக்காலில் 26 கள்ளுக் கடைகளும் உள்ளன. சாராய, கள்ளுக்கடைகளுக்கான ஏலம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையாக நடைபெறும்.
நடப்பு ஆண்டில் ஜூலை 1ந் தேதி முதல் புதிய ஏலத்தில் கடைகள் எடுக்கப்பட்டு இயங்க வேண்டும். இதற்கான கோப்பு கலால்துறை மூலம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கோப்புக்கு கவர்னர் அனுமதி தரவில்லை, இதனால் சாராயம், கள்ளுக்கடைகள் ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து முதல அமைச்சர் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இந்த நிலையில் கலால்துறை அனுப்பிய கோப்புக்கு கவர்னர் அனுமதி தந்துள்ளார். அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் சாராயக்கடைகள் வரும் 29 ந் தேதி ஆன்லைனில் ஏலம் விடப்படுகிறது. இதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
The post ஜூன் 29ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சாராயக் கடைகள் ஏலம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு appeared first on Dinakaran.