×

திருக்குறளில் சிறை!

குற்றவாளிகளுக்குச் சிறைத்தண்டனை கொடுப்பது என்பது பன்னெடும் காலம் தொட்டு உலகெங்கும் நிலவிவரும் ஒரு பழக்கம். உலகின் எல்லா நாடுகளிலும் இந்தப் பழக்கம் தொன்றுதொட்டு நிலவி வருகிறது. தமிழின் பழைய சங்கப் பாடல்கள் சிறை பற்றியும், சிறையில் மன்னர்கள் பட்ட அவதி பற்றியும் பேசுகின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளும் சிறை பற்றிச் சொல்கிறது.

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
(குறள் எண் 57)

பெண்களை நான்கு சுவர்களுக்கு உள்ளே சிறை வைத்துக் காவல் காத்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் தங்களின் ஒழுக்கத்தால் தங்களைத்
தாங்களே தற்காத்துக் கொள்வதுதான் காவல்.

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
(குறள் எண் 499)

வெளியார் புகாத வகையில் சிறை என்று சொல்லத்தக்க கட்டுக்காவலோடு கூடிய கோட்டையும் பிற படைபலமும் இல்லாதவராயினும் அவரை அவர் வாழும் இடத்தில் சென்று தாக்குவது கடினம்.

செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
(குறள் எண் 569)

முன்னமே தக்கவாறு சிறைபோல் அரண் அமைத்துத் தன் நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளாத வேந்தன், போர்வந்த காலத்தில் தற்காப்பு இல்லாததால் அஞ்சி அழிவான்.
இந்தக் குறள்களிலிருந்து திருவள்ளுவர் காலத்திலும் சிறைத் தண்டனை கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.சங்கப் பாடலொன்று ஒரு மன்னன் சிறைப்பட்டதையும் அவன் தண்ணீருக்குத் தவித்த தவிப்பையும் பற்றிப் பேசுகிறது. புறநானூற்றில் வரும் பாடல் அது.சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு போரிட்டுச் சிறைப் பிடிக்கப் பட்டான். சிறையில் சேர மன்னன் தாகத்தால் நாவறண்டு தண்ணீர் கேட்டபோது சோழ மன்னனின் காவலர்கள் அவனை மதியாது தாமதமாகத் தண்ணீர் கொடுத்தார்கள்.

சுயமரியாதை நிறைந்த சேரன் நீர் அருந்த மறுத்து உயிர் நீத்தான். தன் நிலை பற்றிய கழிவிரக்கத்தோடு சேர மன்னன் கணைக்கால் இரும்பொறை அப்போது பாடிய பாடல் புகழ்பெற்றது.

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள்அன்று என்று வாளில் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள்அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீ தணியத்
தாம்இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ் உலகத் தானே? (புறம் 74)

பிறந்த குழந்தை இறந்து விட்டாலும், ஒருவேளை சதைப் பிண்டமாகவே பிறந்தாலும், அடக்கம் செய்யுமுன் அவனை வீரன் என அடையாளப்படுத்த வேண்டிவாளால் காயப்படுத்துவர். ஆனால், நானோ வஞ்சகத்தால் சிறைப்பிடிக்கப் பட்டேன். என் தாகம் தணிக்க நீர் கேட்டேன். இரந்து தாமதமாகப் பெற்ற இந்தத் தண்ணீரை அருந்தவும் வேண்டுமோ?’ என எண்ணி உண்ணாமல் நாவறண்டு உயிர் நீத்தான் சேரமன்னன்.

சங்ககாலச் சிறை பற்றிய சொற்சித்திரமாக இந்தப் பாடல் திகழ்கிறது. ராமாயணம் சீதாதேவியின் ஓராண்டுச் சிறை வாழ்க்கையைப் பேசுகிறது. அவளைக் கானகத்திலிருந்து கடத்திக் கொண்டுபோய் இலங்கை அசோகவனத்தில் சிறைவைத்தான் ராவணன்.

சுந்தரகாண்டம் முழுவதும் அசோக வனத்தில் சீதை பட்ட துயரங்களைத் தான் விவரிக்கிறது. அதனால்தான் ராமாயணத்தை, `சிறையிருந்தாள் ஏற்றம் கூறும் நூல்’ என்கிறார்கள்.
பிரிவுத் துயர் இலக்கியச் சுவைகளில் தலையாயது. அதை விப்ரலம்பம் என்ற சொல்லால் போற்றுகிறது சம்ஸ்க்ருத இலக்கியம். அழகிய பிரிவுச் சுவையே இந்தக் காண்டத்தில் பிரதானமாக இருப்பதால், இந்தக் காண்டமே `சுந்தர காண்டம்’ என அழைக்கப்படுகிறது.

`கல்லா மதியே கதிர்வாள் நிலவே
செல்லா இரவே சிறுகா இருளே
எல்லாம் எனையே முனிவீர் நினையா
வில்லாளனை யேதும் விளித்திலிரோ?’

சீதை அசோகவனச் சிறையிலிருந்து மட்டுமல்ல, ராவணனின் மனச் சிறையிலிருந்தும் விடுபட வேண்டுமே?

ராவண வதத்திற்குப் பின் அவன் உடலைக் காண வருகிறாள் அவன் மனைவி மண்டோதரி தேவி. ராமனின் அம்பு ஒருமுறை தைத்தாலே ராவணன் உயிர் போயிருக்குமே? அப்படியிருக்க அவன் அம்பு பலமுறை ராவணனைத் தைத்திருப்பது ஏன் என எண்ணி அழுகிறாள் அவள். ராவணன் சீதைமேல் கொண்ட காமம், அவன் மனத்தில் எங்கேனும் இன்னமும் மீதமிருக்கிறதோ என அறிய வேண்டி, அந்த அம்பு பலமுறை அவன் இதயத்தைத் துளைத்துத் துளைத்துத் தேடிப் பார்த்ததோ எனச் சொல்லி அவள் புலம்புவதாக எழுதுகிறார் கம்பர்.

வெள்ளெருக்கஞ் சடைமுடியான்
வெற்பெடுத்த
திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும்
இடம்நாடி இழைத்தவாறோ
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
மனச் சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல்புகுந்து
தடவியதோ ஒரு வன்வாளி.

பாகவதமும் சிறைபற்றிப் பேசுகிறது. தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையில் அடைக்கப் பட்டார்கள். சிறையில்தான் கண்ணன் பிறந்தான். ஒருத்தி மகனாய்ப் பிறந்த கண்ணன் பின்னர் இன்னொருத்தி மகனாய் வளர்ந்தான். யசோதையால் வளர்க்கப் பட்டு, பிறகு வாலிப வயதை அடைந்ததும், கம்சனை வதம் செய்து தனது உண்மையான பெற்றோரைச் சிறையிலிருந்து விடுவித்தான் என்கிறது கண்ணன் வரலாற்றை விவரிக்கும் பாகவதம். பின்னாளில் நரகாசுரனை வதம் செய்து, அவன் தன் சிறையில் அடைத்து வைத்திருந்த பத்தாயிரம் பெண்களைக் கண்ணன் விடுவித்து, மணந்து கொண்டான் என்பதையும் பாகவதம் சொல்கிறது.

கண்ணன் சிறையில் அரவிந்தருக்குக் காட்சி கொடுத்த செய்தியைச் சொல்கிறது, நமது அண்மைக்கால சுதந்திர வரலாறு. சிறையிலேயே பிறந்தவன் தானே கண்ணன்? அவனுக்குச் சிறையில் காட்சி தருவதில் எந்தச் சிக்கலும் இல்லையே? செய்யாத கொலைக் குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்ட தான், கண்ணன் அருளாலேயே சிறையிலிருந்து விடுதலை பெற்றதாக எழுதுகிறார் ஸ்ரீஅரவிந்தர். பிரம்மன் ஒருமுறை சிவனை தரிசிக்கக் கயிலாயம் வந்தார்.

அங்கு சிறுவன் முருகனைக் கண்டார். சிறுவன்தானே என்று கவனியாததுபோல் அலட்சியமாகச் சென்றார் பிரம்மதேவர். வழிமறித்த முருகன் அவரைத் தடுத்துக் கேள்வி கேட்கலானான்:

`நீர் செய்யும் தொழில் என்ன?’`படைப்புத் தொழில்!’

`படைப்புத் தொழில் செய்வதாகச் சொல்கிறீரே? உமக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா?’ அண்டம் முழுவதற்கும் அச்சாணியாக இருக்கும் ஓம் என்ற பிரணவத்தின் பொருள் தெரியாமல் முருகனிடம் அகப்பட்டுக் கொண்டு திகைத்தார் பிரம்மதேவர்.

`பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத உமக்கு, படைப்புத் தொழில் செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்று வினவிய முருகன், அவர் தலையில் ஒரு குட்டுக் குட்டி அவரைச் சிறையில் அடைத்தான். அவ்வளவுதான். படைப்புத் தொழில் தடைபட்டது. உலகில் உயிர்களே உற்பத்தி ஆகவில்லை. தேவர்கள் கலக்க மடைந்து சிவபெருமானிடம் சென்று அவர் புதல்வனைப் பற்றி முறையிட்டனர்.

சிவன், இனியும் சிவனே என்றிருத்தல் சரியல்ல என, தன் மகன் முருகனைத் தேடி ஓடி வந்தார். பிரம்மனை விடுவிக்கச் சொன்ன அவர், `பிரம்மனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியவில்லை என்கிறாயே, உனக்கு அதன் பொருள் தெரியுமா?’ என வினவினார்.`இப்படிக் கேட்டால் எப்படி? நீங்கள் சீடனாக அமர்ந்து கேட்டால் யாம் குருவாக அதன் பொருளை உபதேசம் செய்வோம்!’ என்றான் முருகன். அப்படியே சிவன் சீடனாக அமர்ந்து கேட்க, அவர் தோளில் அமர்ந்து திருச்செவியில் பிரணவ மந்திரத்தின் பொருளை முருகன் உபதேசம் செய்தான்.

அதன் பின்னர் பிரம்மதேவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப் பட்டதைச் சொல்கிறது கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணம். அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையன் வரலாறு இது.ராமதாசரின் இயற்பெயர் கோபண்ணா. அரசாங்கத்திற்காக வரிவசூல் செய்யும் வேலையில் இருந்தவர். வரிப்பணத்தை மக்களிடமிருந்து வசூல் செய்து அதில் ராமபிரானுக்குக் கோயில் கட்டினார். வரிப்பணத்தில் கோயில் கட்டினால் மன்னன் தானீஷா ஒப்புக் கொள்வானா? அவரைச் சிறையில் அடைத்தான்.

பன்னிரண்டு ஆண்டுகள் சிறையில் வாடினார் ராமதாசர். அப்போது அவர் பாடிய ராமபக்திப் பாடல்கள் நெஞ்சை நெகிழச் செய்பவை. `உன்னைக் கும்பிட்ட கைகளைத் தடிகொண்டு அடிக்கிறார்களே ராமா!’ `உனக்குக் கிரீடம் செய்து சூட்டிய என் கைக்கு நீ விலங்கு பூட்டலாமா?’ `உனக்காக நான் செலவழித்த பணத்தை நீயே மன்னருக்குக் கொடுத்துவிடலாகாதா?’ என்றெல்லாம் அவர் வினவும் வரிகள் உள்ளத்தை உருக்குபவை.ஒருநாள் நள்ளிரவில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. ராம்சிங் லட்சுமண் சிங் என்ற பெயர்களில், ராமதாசரின் சேவகர்கள்போல் வந்த ராம லட்சுமணர்கள், ராமதாசர் செலவு செய்த ஆறுலட்சம் வராகனை மன்னரிடம் திருப்பி அளித்தார்கள். அப்படி அளித்ததற்கு ரசீது பெற்று, ரசீதைச் சிறையிலிருந்த ராமதாசரின் அருகில் வைத்துவிட்டு மறைந்து விட்டார்கள்.

பாதுஷா மனம் திருந்தியதையும் ராமதாசர் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டதையும் அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் ராமதாசரின் புகழ் மேலோங்கியதையும் அவரது வரலாறு சொல்கிறது.
சுதந்திரத் தியாகிகள் வெள்ளையர்களால் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையிருந்ததையும் சிறையில் தியாகிகள் அனுபவித்த கொடுமை களையும் நமது சுதந்திர வரலாறு பதிவு செய்துள்ளது.

செக்கிழுத்த செம்மல் என்றறியப்படும் வ.உ.சிதம்பரம் பிள்ளை தமிழகத்தின் கோவைச் சிறையில் பட்ட இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மாட்டுக்குப் பதிலாக அல்லவா செக்கில் அவரைப் பூட்டி அதை இழுக்கச் சொன்னார்கள்? அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்த அதிர்ச்சியில் அவர் தம்பி மீனாட்சி சுந்தரத்திற்குப் பித்துப் பிடித்தது. தமது வாழ்நாள் முழுவதும் அவர் பைத்தியமாகவே இருந்தார் என்கிறது வரலாறு.

பால கங்காதர திலகரின் மனைவி சத்தியபாமா, திலகருக்கு ஆறாண்டு சிறைத் தண்டனை என்ற செய்தியை வானொலி மூலம் அறிந்தாள். கணவர் சிறைப்பட்ட செய்திகேட்ட அதிர்ச்சியிலும் தன் மூன்று பெண் குழந்தைகளை இனி எப்படி வளர்ப்போம் என்ற கவலையிலும் அன்றிரவே அவள் காலமானாள். இதுவும் நம் சுதந்திர வரலாற்றில் பதிந்துள்ள உண்மைச் செய்திதான். தியாகிகள் பலரும் சிறையில்தான் பல உயர்தர நூல்களை எழுதினார்கள். திலகர் உள்ளிட்ட வட இந்தியத் தியாகிகள் பலரும் கீதைக்கு உரை எழுதியது சிறை வாழ்வின் போதுதான். வினோபாவின் கீதைப் பேருரைகள் நூல் சிறையில் சக கைதிகளுக்கு நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்புத் தான்.

இந்தியப் பண்பாட்டையும் கலாசாரத்தையும் விளக்கும் கட்டுரைகளை உள்ளடக்கிய `டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்ற புகழ்பெற்ற நூலை ஜவகர்லால் நேரு எழுதியதும் சிறையில்தான். (அந்த மாபெரும் நூல் காலஞ்சென்ற எழுத்தாளர் ஜெயரதன் மொழிபெயர்ப்பில் `கண்டுணர்ந்த இந்தியா’ என்ற தலைப்பில் தமிழிலும் வெளிவந்துள்ளது.)

வ.உ.சி. சிறை வாழ்க்கையில் தமக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தில் தமிழ்ப் பணியைச் செய்தார். தமக்குப் பிடித்த நூலாசிரியரான ஜேம்ஸ் ஆலன் எழுதிய நூல்களை `வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம், அகமே புறம், மெய்யறிவு’ போன்ற தலைப்புகளில் அவர் மொழிபெயர்த்தது அப்போதுதான். தனிமனிதனை மிகப் பெரிய அளவில் மேம்படுத்தக் கூடிய உன்னதமான
நூல்கள் அவை.

குளத்தங்கரை அரசமரம் என்ற தமிழின் முன்னோடிச் சிறுகதையை எழுதிய வ.வே.சு.ஐயர் கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது அவரது சிறை வாழ்வின் போதுதான். இன்றும் குற்றவாளிகளுக்குச் சிறைத் தண்டனை அளிக்கப் படுவதைப் பார்க்கிறோம். நாட்டின் பல்வேறிடங்களில் பற்பல சிறைகள் இயங்குவதையும் பார்க்கிறோம்.

திருக்குறள் சொல்லும் கருத்துகள் பரவி,
மக்கள் பெருவாரியான அளவில் குறள் கருத்து
களைப் பின்பற்றத் தொடங்கினால், நம் நாட்டில் சிறைச் சாலைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறையும் என்பதில் சந்தேகமில்லை.

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

 

The post திருக்குறளில் சிறை! appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஆன்மா பற்றிய உண்மையை உணர முடிவதில்லை!