×

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தாறுமாறாக கட்டப்படும் கான்கிரீட் மழைநீர் வடிகால், நடைபாதை

*பவானியில் பொதுமக்கள் குற்றச்சாட்டு

பவானி : பவானி நகராட்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் வளைந்தும், நெளிந்தும் தாறுமாறாக கான்கிரீட் மழை நீர் வடிகால் மற்றும் நடைபாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தவிர்க்க பவானி நகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து சாலையோர அளவீட்டு பணிகளை மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றிய பின்னரே கான்கிரீட் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

ஈரோடு – பவானி – மேட்டூர் – தொப்பூர் வரையில் 85 கிலோ மீட்டர் தொலைவிற்கு, தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பல்வேறு இடங்களில் சாலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, முழுமையாக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ரோடுகள் மிகக்குறுகி காணப்பட்ட நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை பகுதிகளில் ரோட்டோர ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு, முறையாக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பின்னர் கான்கிரீட் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து எளிதாக காணப்படுகிறது. ஆனால், வாகன நெருக்கம் அதிகம் உள்ள பவானி நகரம் மற்றும் காலிங்கராயன்பாளையம் பகுதிகளில் முறையாக ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் தேசிய நெடுஞ்சாலை துறையினர் கான்கிரீட் மழை நீர் வடிகால் மற்றும் நடைபாதை கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக, தற்போது பவானி நகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முறையாக அளவீடு செய்யப்படாமல், தாறுமாறாக கட்டப்படுவதாகவும், சாலையின் அகலம் குறைந்து எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனை தவிர்க்க ஏற்கனவே இச்சாலையை பராமரித்து வந்த தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களை ஆக்கிரமிப்புகளை கண்டறிய உதவிக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், நகராட்சி நில அளவையாளர் மற்றும் வருவாய்த்துறை நில அளவையாளர்கள் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டு முறையாக அளவீடு செய்து, சாலையோர ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிய பின்னர் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டால், ஆக்கிரமிப்புகள் குறைந்து எக்காலத்திலும் பவானி நகருக்குள் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறையும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.

இதுதொடர்பாக பலமுறை தேசிய நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்த போதிலும் கண்டும், காணாமல் அலட்சிய போக்குடன் மழைநீர் வடிகால் கட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தாறுமாறாக பணி மேற்கொள்ளப்படுவதால் குடிநீர் குழாய் உடைப்பு, குடிநீர் குழாய் சேதம் என பல்வேறு இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர். பல்வேறு பகுதியில் விடுபட்டுள்ள பணிகளால் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும், அவசர கதியில் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கட்டுமானமும் தரமின்றி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முழுமையாக ஈடுபாட்டுடன் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் சுற்றுலா நகராகவும், வழிபாட்டு தலங்கள் நிறைந்த பவானி நகரின் புனிதத்தை காக்கும் வகையிலும், எதிர்கால போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையிலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

The post தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தாறுமாறாக கட்டப்படும் கான்கிரீட் மழைநீர் வடிகால், நடைபாதை appeared first on Dinakaran.

Tags : National Highways Department ,Bhawani ,Bhavani ,Dinakaran ,
× RELATED தேனியில் இன்று பெரியகுளம் சாலையில் மரங்களை வெட்டி அகற்றும் பணி ஏலம்