சென்னை : இதய வால்வுகளில் குறிப்பாக பெருந்தமனி எனப்படும் அயோட்டா வால்வில் பிரச்னை ஏற்படுவது கடந்த பல ஆண்டுகளாக முதியவர்களிடையே அதிகரித்து வருகிறது. அயோட்டா வால்வு முழுமையாக திறக்காததால், ரத்த ஓட்டம் செல்வது தடைபடும். இதற்கு ‘திறந்த நிலை’ அறுவை சிகிச்சையில் வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. தற்போது செயற்கை இதய வால்வுகளை பயன்படுத்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜி. செங்கோட்டுவேலு கூறியதாவது: கடந்த 2016ம் ஆண்டில் இருந்து, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் நம் நாட்டிலேயே ‘மெரில் லைப் சயின்சஸ்’ என்ற நிறுவனம் மூலம் டிரான்ஸ்கதீட்டர் ஹார்ட் வால்வு என்ற செயற்கை இதய வால்வுகள் சர்வதேச நவீன மருத்துவ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. உள்நாட்டிலேயே தயாரித்ததால் மிகக் குறைந்த செலவில் இதை செய்ய முடிந்தது.
ஐரோப்பியா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக அளவில் இவற்றை பயன்படுத்திய பின், அவர்கள் நாட்டில் தயாரித்த வால்வுகளுடன் நம் வால்வுகளை ஒப்பிட்டு ஓர் ஆய்வு செய்தனர். அது தற்போது ‘லான்செட் மார்க்’ ஆய்வு என்று லான்செட் சர்வதேச மருத்துவ இதழில் வெளியாகி உள்ளது. அதில், ஐரோப்பாவில் பயன்பாட்டில் உள்ள வால்வுகளை விடவும், இந்திய வால்வுகள் தரமாக உள்ளன. நீண்ட காலத்திற்குப் பலன் தருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் இந்த செயற்கை இதய வால்வுகளை இனிமேல் பயன்படுத்த எந்த தடையும் இருக்காது. இதனால் பல உயிர்களை காப்பாற்ற முடியும். இந்த வால்வுகளை திறந்த நிலை அறுவை சிகிச்சை இல்லாமல், ஸ்டென்ட் போன்று சுலபமாக பொருத்தலாம். அதிகபட்சம் இரண்டு நாட்கள் நோயாளி மருத்துவமனையில் இருந்தால் போதும். இதய வால்வு ஆராய்ச்சியில் இது பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post இதய பெருந்தமனி பிரச்னை செயற்கை இதய வால்வு மூலம் சிகிச்சை அளிக்கலாம்: அப்போலோ மருத்துவர் தகவல் appeared first on Dinakaran.